Monday 31 December 2012

இளைப்பாற்றும் படிக்கட்டு.

இளைப்பாற்றும் படிக்கட்டு.
  
   நண்பர்களோடு அலவலாவுவதே ஒரு அலாதி..அதுவும் பழங்கதைகளைப் பேசும்போது ஒரு தனி சுகம்!

      முன்னேறிச்செல்லும்  வாழ்க்கையின் அடுத்தடுத்த படிகள் இவற்றிலிருந்து நம்மை நீண்ட தூரம் இட்டுச்சென்றுவிடுகிறது...அவ்வப்போது ஏதோ ஒரு படியில் உட்கார்ந்து இளைப்பாறும்போது, கடந்து வந்த படிகளை மனதில் எண்ணி அசைபோடுவது என்பது சில்லென்ற ஒரு சுகம் தரும்!

            இவ்வித அனுபவம் நண்பர்கள் அனேகருக்கு இருந்திருக்கும்.... இருந்தாலும்  சொல்லத்தெரியாது..  ஒருவர் சொல்லும்போது அதை அனுபவிக்கும் பலரில் நானும் ஒருவன்….

          …இப்படி என் வாழ்வில் ஒரு முறை ...ஹாஸ்டல் வாழ்க்கையில்...

    ..காலையில் மெஸ்சில் சாப்பிட்டுவிட்டு மரத்தடியில் நானும் நண்பர் மயில்வாகனன் (தற்சமயம் எங்கிருக்கின்றார் எனத்தெரியவில்லை..சென்னையில்?) மரத்தடி பெஞ்சில் உட்கார்ந்து பேச ஆரம்பித்தோம்.

      இறுதி ஆண்டின் கடைசீ செமஸ்டர் என்ற மனதைரியத்தில் வகுப்புக்கு செல்லாமல் பேச ஆரம்பித்தோம். கடைசீயாய் சாப்பிட்ட எதிர் wing  நண்பர் அருண் (தற்போது ஹோசுரில் இருப்பதாய் நினைவு)  "ஹாய்..என்னங்கப்பா..க்ளாஸ் கட்டா" ன்னு கேலியாய் கேட்டுவிட்டு போனவருக்கு ஆமாம் என்று சொல்லிவிட்டு வகுப்புத் தோழனின் காதல் தோல்வி பற்றிப் பேச ஆரம்பித்து….ஆசிரியர்களின் டம்பம் பற்றி பேசி...ஆங்கிலம் வராததால் அவஸ்தைப்படும் நண்பன் ஆறுமுகம் வரை (இவர் பின்னர் டுட்டோரியல் காலேஜ்ஜில் வகுப்பு எடுத்ததாய் கேள்வி) பேசியபோது மதிய உணவுவேளை வந்தது..

     
போய் சாப்பிட்டுவிட்டு வந்து....மீண்டும் பேச்சு....எடுக்கத்தெரியாமல் எடுத்து சாகடிக்கும் திரை இயக்குனர்களின்  திறமையை அலசியபோது.."என்னப்பா.. சாப்ட்டாவது வந்து பேசுங்களேன்.." என்ற அருணுக்கு "எப்பியோ சாப்டாச்சுன்னு" சொல்லிட்டு, கரடி, ஆடு, மாடு, பாம்பு இதெல்லாம் வச்சு படமெடுக்கறதைப் பேசி.....நகைச்சுவையின் நயம் பேசி..நாயகிகளின் நடிப்பு பேசி....நான் எடுத்தால் எப்படி எடுப்பேன், அதில் வசனகர்த்தா கண்டிப்பா நம்ம ஆறுமுகம் தான், அப்பதான் படத்துக்கு ஒரு டப்பிங் பட எஃபெக்ட் இருக்கும், வசூல் கையை கடிக்காது என்றபோது "காப்பி ரெடி" ங்கற மாதிரி மெஸ்சில் சினிமா பாட்டு போட்டாங்க..

             போய் சாப்பிட்டு வந்து உட்கார்ந்தா... "எந்திரிங்கடா.. அவனவன் எப்படி அரியரை க்ளியர் பண்றதுன்னு கவலையா இருக்கானுவோ ..நீங்க என்னென்னா வெறுப்பேத்ரமாதிரி.. தின்னு  தின்னுட்டு நாள்முச்சூறும்  உக்காந்து கதையா பேசுறீங்க நீங்க" ன்னு அந்த ஹஸ்டல் பிளாக்கின்  இரண்டு  விங் நண்பர்களும் அருணின் தலைமையில் ஒன்றுகூடி எங்களை ஓட ஓட விரட்டியடிக்க...

          பின்னர்தான் தெரிந்தது...அந்த அருண்தான் ரூம் ரூமாய் போய் சொல்லி எல்லோரையும் திரட்டி வந்தான்னு.....

    மறக்கக்கூடாதென்று அதே இடத்தில் இருவரும் உட்கார்ந்து படம் எடுத்துக்கொண்டோம்.. ஹாஸ்டல் வாழ்வின் கடைசீ நாளன்று….கேமிரா க்ளிக் வேறு யாரு..? ..அருண் தான் ....

   இன்றும்….பார்க்கும்போதெல்லாம் அந்தப்புகைப்படம் முகத்தில் சிரிப்பையும் மனதில் மகிழ்ச்சியையும் கொண்டுவருகின்றது..!


                                             ~~~~~~~~~~~~*****~~~~~~~~~~~~~~~

No comments:

Post a Comment