Sunday 24 November 2013

ஆச்சர்யமூட்டும் வழக்குகள்! ( பலகீனமான இதயமுள்ளவர்கள் படிக்கவேண்டாம் ) 1.வினோதமான ஆருஷி தல்வார் கொலை வழக்கு.

                                ஆச்சர்யமூட்டும் வழக்குகள்!
                                                                                   ~~~~~~~~~~~~~~~
               ( பலகீனமான இதயமுள்ளவர்கள் படிக்கவேண்டாம் )


1.வினோதமான ஆருஷி தல்வார் கொலை வழக்கு.

   
அந்த அறையின் கதவு சற்றே விசித்திரமானது. அதை வெளிப்புரத்திலிருந்து பூட்டிவிட்டால் உள்ளிருந்து வெளியே வர சாவி தேவையில்லை. வெளியிலிருந்து உள்ளே செல்ல மட்டுமே சாவி  தேவை. வசதிமிக்கவர்கள் வசிக்கும் அபார்ட்மென்ட் அது. காவல் துறையினர் அந்த அறைக்குள் நுழைந்தபோது கட்டிலில், சுருக்கங்களே இல்லாது விரிக்கப்பட்ட நிலையிலிருந்த படுக்கையில், இளம்பெண்ணின் உடல் இருந்தது. படுக்கையில், தலையணையில் இரத்தக் கரையோ, அதன் சுவடோ இல்லை.

   
காலையில் பார்த்தபோது, தன் மகள், அவளது அறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கின்றாள் எனத் தகவல் சொன்ன அவளின் தந்தையும் தாயும் காவல் துறை அதிகாரிகளுக்கு இன்னது இன்னதென சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

    கடைசீயாய் முந்தைய இரவு சுமார் 11.30 மணிவரையில் தன் மகளை அவளது அறையில் பார்த்ததாயும் அதற்குப் பிறகு அவளது அறைக்கதவைப் பூட்டி சாவியை தன்னுடைய அறையில் படுக்கையின் தலைமாட்டில் வைத்தது ஞாபகமிருப்பதாய் அவளின் அப்பா சொல்லிக்கொண்டிருந்தார்.

    
அப்பெண்ணின் படுக்கைக்குப் பின்னால் (தலைமாட்டில் )இருந்த அவளது பொம்மைகள் சீராய் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ( கவனிக்க - கலையாமல்! )

 
வீட்டில் வேறு ஏதுவும் காணாமல் போயிருக்கவில்லை. ரொக்கமும் விலையுயர்ந்த ஆபரணங்களும் அப்படியே இருந்தன. அவ்வீட்டிற்குள் வரக்கூடிய வசல் கதவுகள் எதுவும் உடைக்கப்படவில்லை. அவ்வீட்டு வேலையாட்களில் ராஜ் என்ற ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் அங்கு கூடியிருந்தனர்.

  
அக்கம்பக்கம் இருந்தவர்களும் கூடிநிற்க, காவல் அதிகாரிகளின் புலன் விசாரணையும் நடந்துகொண்டிருக்க சிறிது சிறிதாயிருந்த அந்தக் கொலை பற்றிய முடிச்சுகள் பெரிதாகிக்கொண்டிருந்தது.

   
“அநியாயமாய் இப்படி தம் மகளை எந்தப் பாவியோ அக்கிரமமாய் செய்துள்ளதை” கூறிப் பெற்றோர் அரற்றிகொண்டிருந்தனர். நண்பர்களும் அண்டை அயல் வீட்டாரும் அவர்களை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தனர். இனம்புரியா அசாதாரணம் அங்கிருந்த காவலர் உள்ளிட்ட அனைவரையும் கவ்விக்கொண்டிருந்தது.

    
குறிப்பிட்ட அந்த இரவில், அந்த அபார்ட்மென்ட்டிலிருந்து வெளியில் போனவர் அல்லது வெளியிலிருந்து அந்த அபார்ட்மென்டுக்குள்ளே வந்தவர் எவரும் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்ததது.

    
சம்பவம் நடந்த வீட்டில், கொலை நடந்த இரவில், அப்பெண்ணின் பெற்றோரும் அவளும் அவர்களது வேலைக்காரன் ராஜ் மட்டுமே இருந்ததை அருகில் வசிப்பவர்கள் பார்த்ததாய் உறுதிப்படுத்தினார்கள். அதுவே அவர்கள் அவளைக் கடைசியாய்
உயிரோடு பார்த்தது என்றும் கூறினார்கள்.

    
மொட்டைமாடிக்குச் செல்லும் படிக்கட்டின் மேல்படிகளில் ரத்தக்கரைகள் இருப்பதையும்    மொட்டைமாடி கதவிலும், கதவின் பூட்டிலும் ரத்தக்கரைகள் இருப்பதையும் தற்போது தான் பார்த்ததாய் பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் வந்து அப்பெண்ணின் அப்பாவிடம் சொல்ல அவர் அதைப்பார்க்க எத்தனித்து படிக்கட்டில் ஒரு சில படிகள் ஏறிவிட்டு, பிறகு, ஏதொ யோசனையாய் நின்று “சாவி வேலைக்காரன் ராஜ்கிட்ட  இருக்குது” என்று  முணுகிக்கொண்டே கீழே இறங்கி வந்து உட்கார்ந்து சுவற்றில் சாய்ந்துகொண்டார்.

  
காவல்துறை அதிகாரிகள் படிக்கட்டில் ஏறிப்போய்பார்த்து மொட்டை மாடிக்குச்செல்லும் வாசல்கதவு பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்ததும் இறங்கி வந்து ‘ரத்தக்கரை’ செய்தி சொன்னவரை விசாரித்தனர்.

    
எப்போதும் பூட்டப்படாது திறந்தேகிடக்கும் அந்தக் கதவு அன்றைக்குதான் பூட்டுபோட்டுப் பூட்டியிருப்பதாய் அவர் சொன்னார், விசாரித்ததில் வேறு சிலரும் ‘ஆமாம் சதா அது திறந்தேதான் கிடக்கும்’ என்றார்கள். ‘இன்றைக்குதான் அதிசயமாய் பூட்டியிருக்கு’ என்றும் சொன்னார்கள்.

    
இறந்தபெண்ணின் உடலும் சிலபொருட்களும் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. விசாரணைக்காக ஒரு சிலர் அழைத்துச் செல்லப்படனர்.

    
மறுநாள், காவல்துறையினர், மொட்டை மாடிக்கதவை உடைத்து சோதனை செய்தபோது  அங்கொரு ஆணின் உடல் மூடிமறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தது.

     கொலை செய்யப்பட்ட பெண்ணின் அப்பா இறந்து கிடந்த அந்நபர் யார் என அடையாளம் காட்டவில்லை.

    
அது, வேலையாள் ராஜின் உடல்தான் என்று அவனது உறவினர் ஒருவர் அடையாளம் காட்டினர்.

    
அப்பெண்ணின் அம்மாவும் அவ்வுடலில் உள்ள ஆடையை வைத்து அது வேலையாள் ராஜ்தான் என அடயாளம்  காட்டினார்.

   
கொலை வேறெங்கோ நடந்து உடல் இங்கு கொண்டுவரப்பட்டாதற்கான, உடலை இழுத்துவந்த, அடையாளம் தரையில் காணப்பட்டது. ரத்தக்கரை படிந்த போர்வை ஒன்று மடித்து க்ரில் மேல் வைக்கப்படிருந்தது.

  
இரண்டு கொலைகளையும் நேரடியாய் பார்த்த சாட்சிகள் ஏதுமில்லை. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஏதும் கிடைக்கவில்லை.

     
வழக்கின் புலன் விசாரணை உள்ளூர் காவல்துறையிடமிருந்து சிறப்பு பிரிவுக்கு மாறியது.

   
பிரேதப்பரிசோதனை அறிக்கை, கொலையான வேலையாள் மற்றும் அப்பெண் ஆகிய இருவரது  தலையிலும் வளுவான பொருளால் தாக்கப்பட்ட காயங்களும், இருவரது  கழுத்திலும் நீளவாட்டில் தொழில் சாதுர்யம் தெரிந்த ஒருவரால் (சர்ஜிக்கலி ட்ரெயின்டு பெர்சொனால்) ஏற்படுத்தப்பட்ட வெட்டுக்காயமும் இருந்ததையும் அக்காயங்களால் மரணம் ஏற்பட்டுள்ளதையும் குறிப்பிட்டிருந்தது.
 
    
சந்தேகத்தின் பேரில் அப்பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர் ஜாமினில் வெளிவந்த அவர்கள் தங்கள் மகளின் கொலைக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்கவேண்டுமென்று பலவககளில் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

   
பிரேதப்பரிசோதனை செய்த டாக்டரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர், பிரேதத்தில், இறந்துபோன அப்பெண்ணின் பெண்ணுறுப்பு அவள் இறந்த பின்னர் சுத்தம் செய்யப்பட்டிருப்பற்கான அறிகுறிகளைச் சொன்னார்.

  
மேலும், “கற்பழிப்பு” என்று பிரேதப்பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடவேண்டாம் என அப்பெண்ணின் சித்தப்பாவின் தூண்டுதலின்பேரில் மற்றொரு மருத்துவர் தனக்கு சிபாரிசு செய்ததையும் குறிப்பிட்டார்.

 
  மேலும், கொலையான பெண்ணினது பெண்ணுறுப்பின் மெல்பகுதியில் மட்டும் white discharge காணப்பட்டதையும், உறுப்பு இயல்புக்கு மாறாக அகண்டிருந்ததையும் குறிப்பிட்டார்.

  
  சிறப்புப் பிரிவினர், தங்களின் முயற்சிகளுக்குப் பின்னரும்...

1.வேலையாளின் இரத்தம் அப்பெண்ணின் படுக்கை விரிப்பிலோ, தலையணையிலோ இல்லை.அவளின் அறையில் அவனது கொலை நடந்ததென நிருபிக்க ஆதாரம் ஏதும் இல்லை.

2.மாடிப்படிக்கடில் பிணத்தை இழுத்துச் சென்ற அடையாளங்கள் மொட்டைமாடி அல்லாமல் வேறு இடத்தில் அவனது கொலை நடந்ததைக் காட்டுகின்றது.

3.அப்பெண்ணின பெற்றோரது உடையில் அவளது ரத்தகரை மட்டுமே காணப்படுகிறது, தவிர, வேலையாளின் ரத்தம் ஏதும் இல்லை.

4. கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் ஏதும் குற்றம் நடந்தபின் உடனடியாய் கண்டுபிடிக்கப்படவில்லை. கொலைக்குப் (கழுத்தில்வெட்ட) பயன்படுத்தப்பட்ட கூர்மையான கண்டுபிடிக்கப்படவே இல்லை. கைப்பற்றப்பட்ட கால்ப் ஸ்டிக்கில் இறந்துபோனவர்களின் இரத்தம் அல்லது டி.என்.ஏ காணப்படவில்லை.

 
[ இந்த  கால்ப் ஸ்டிக் சம்பவம் நடந்து ஓராண்டு கழித்துக் கண்டெடுக்கப்பட்டது ]

5.கைப்பற்றப்பெற்ற, கொலைசெய்யப்பட்ட இருவரின் இரத்தக்கரைகள் தோய்ந்த ஸ்காட்ச் பாட்டிலில் காணப்பட்ட கைவிரல் ரேகைகளை விளக்கும் ஆதாரமில்லை, அவை யாருடையவை என்பதை அடையாளம் காணமுடியவில்லை.

6.சம்பவம் நடந்த அபார்ட்மென்ட் காவலாளிகள் வந்துபோனவர்கள் பற்றிய பதிவுகள் எதையும் செய்திருக்கவில்லை.

7. பெற்றோர்தான் குற்றதில் ஈடுபட்டவர்கள் என நிருபணம் செய்ய ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

8. கொலைக்குபின்னர் வேலையாளின் செல் போன் இன்னோரு மாநிலத்தில் இருந்ததன் காரணத்தை விளக்கும் சாட்சியம் கிடைக்கவில்லை.

9.  கொலையானது ஒரு அபார்ட்மென்டினுள் நடந்தது என்பதால் நேரில் பார்த்த சாட்கள் எவரும் இல்லை.

10. கொலைக்குப்பின் அந்த வீட்டடின் தரை, படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்த ரத்தகரைகளை சுத்தப்படுத்த உபயோகித்த ரத்தம் தோய்ந்த துணி கண்டுபிடிக்கப்பட்டவில்லை, வேலையாளின் பிணத்தை மாடிக்குக் கொண்டு செல்லப் பயன்படுத்திய படுக்கை விரிப்பு கண்டுபிடிக்கப்பட்டவில்லை.

   எனும் காரணங்களையும் வேறு சில காரணங்களையும் காட்டி வழக்கை முடித்துக்கொள்ள குற்றவியல் நீதிபதிக்கு (சிறப்பு பிரிவினர்) அறிக்கை அனுப்பினர்.

    இதன்பின்னர், சட்டத்தின்படியாக குற்றவியல் நீதிபதிகு இருந்த வாய்ப்புகள் மூன்று. அவை,
     1. இவ்வறிக்கையை ஏற்று குற்றவியல் நீதிபதி வழக்கை கைவிடலாம் ( ஆனால் அந்நீதிபதி அவ்வறிக்கையை ஏற்க மறுத்தார்)

  2. ஆயினும் போதுமான சாட்சியங்கள் இருப்பதாய் நீதிபதி கருதும்பட்சத்தில் அவ்வறிக்கையை ஏற்காது குற்றவாளிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிடலாம் (அந்நீதிபதி இதைத்தான் செய்தார்).

   3. காவல்துறையினருக்கு மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிடலாம்.

  (நீதிபதி இந்த மூன்றாவதான வகையைப் பயன்படுத்த) சிறப்புப் பிரிவின் அறிக்கையை ஏற்று வழக்கை முடிக்கக் கூடாது, தம் மகளைக் கொன்ற உண்மைக்குற்றவாளியைக் கண்டறிய மீண்டும் விசாரிக்க உத்தரவிடவேண்டும் என பெண்ணின் பெற்றோர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆட்சேபணை மனு தாக்கல் செய்தனர்.

   
சிறப்பு புலனாய்வாளரது அறிக்கையைப் பெற்ற குற்றவியல் நீதிபதி, அதனை ஏற்க மறுத்ததுடன் பெற்றோரின் மனுவையும் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டதோடில்லாமல் 13 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை/ செய்கைகளை/ ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி, கொலைசெய்யப்பட்ட அப்பெண்ணின் பெற்றோருக்கு குற்றவாளிகளுக்கான சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அவற்றுள் சில….

##…
விசாரணையில்   சொன்னபடி, சம்பவம் நடந்த இரவு அவ் வீட்டில் இறந்துபோன பெண், அவளது பெற்றோர், வேலைக்காரன் ராஜ் ஆகிய நால்வர் இருந்துள்ளதை அக்கம்பக்கத்து வீட்டார் பார்த்திருக்கின்றனர்.

 ##…அதில் இருவர் கொலையாகி இறந்தபின்புயார்  கொலைக்கு காரணமாய் இருப்பார்கள்’ என்ற கேள்விக்கு நால்வரில்  உயிரோடு இருக்கும் அவ்விருவரையும்தான் சந்தேகத்தின் கை சுட்டிக்காட்டுகின்றது.

##…..அவளுடைய அறைக்கோ வீட்டிற்கோ பலவந்தமாய் வெளியிலிருந்து அவ்வீட்டிற்குள் எவரும் சென்றதக தடயங்கள் ஏதும் இல்லாதபோது உள்ளே இருந்தவர்கள்தான் குற்றத்தில் ஈடுபட்டிருக்கவேண்டும்…  கதவுகள் உடைக்கப்படாதிருப்பதால்..

     தங்களுக்கு குற்றவாளிக்கான சம்மன் அனுப்பியதை எதிர்த்தும் அதை ரத்துசெய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறியீடு செய்தனர் பெற்றோர்.
   
    குற்றவியல் நீதிபதி அப்பெண்ணின் பெற்றோருக்கு குற்றவாளிகளுக்கான சம்மன் அனுப்ப உத்தரவிட்டது சரியே அதை ரத்துசெய்ய முடியாது என 7-6-2012 ஆம் தேதியில் மேல் முறையீட்டைத் தள்ளூபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

     
இறந்த பெண்ணின் பெயர் ஆருஷி தல்வார்.

    
அவளின் பெற்றோரும், சித்தப்பாவும் டாக்டர்கள்.

    
கொலை 2008 ஆம் ஆண்டு மே மாத 15 -16 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் உத்திரப்பிரதேச நொய்டாவில் நடந்தது.

    
சிறப்புப் புலனாய்வு பிரிவு – சி.பி.ஐ.

                                                                   **********

Thursday 14 November 2013

காமன் வெல்த் மாநாட்டில் கனடாவின் பங்கேற்பு குறித்த செய்திகளை எந்த இந்திய ஊடகங்களும் வெளியிடாதது ஏன் ? எதற்காக??




 காமன் வெல்த் மாநாட்டில் கனடாவின் பங்கேற்பு குறித்த செய்திகளை எந்த இந்திய ஊடகங்களும் வெளியிடாதது ஏன் ? எதற்காக??
                               ~~~~~~~~~~~~~    புலம் பெயர்ந்த இலங்கைத் தமிழர் அதிகம் வசிக்கும் நாடு வட அமெரிக்க நாடான கனடா ஆகும். அதன் அடிப்படையில் இலங்கைத் தமிழரது இன்னல்கள் குறித்து அந்நாடு எடுக்கும் நிலைப்பாடு பெருமளவில் பிற நாடுகளில் பேசப்படும்.

    கடந்த 2011ம் ஆண்டு அக்டோபர் மாதம் ஆஸ்த்ரேலியாவில் நடைபெற்ற காமன்வெல்த்
மாநாட்டில் 2013ல் இலங்கையில் மாநாடு நடத்துவது தொடர்பாக விவாதிக்கப்பட்டபோது, கனடா அதிபர் ஸ்டீபன் ஹார்பர்  கடும்கண்டனத்தை பதிவு செய்தார் என்றும், அவையிலிருந்து வெளிநடப்பு செய்தார் என்றும் மேலும், இலங்கையில்  மாநாடு நடைபெற்றால், அதில் கனடா பங்கேற்காது (கவனியுங்கள் கனடா) எனவும் அறிவித்தார் என்றும் மிகப் பெருமையாக பலரால் பேசப்பட்டதும் யாவரும் அறிந்ததே.

    அதுபோலவே, அண்மையிலும் ‘ கொழும்பில் இடம் பெறும் காமன் வெல்த் மாநாட்டில் கனடா நாட்டின் குழுவும் அந்நாட்டின் பிரதமர் ஸ்டீபன் ஹாபரும் பங்கேற்காது புறக்கனிக்கின்றனர் ’ என்றும் எல்லா ஊடகங்களாலும் முன்னிறுத்தப்பட்டது.

    
ஆனால், நவம்பர் 7ந்தேதியிலேயே இலங்கையின் ‘தி ஐலண்டு’ ஆங்கிலப் பத்திரிக்கை ‘‘கனடா பங்கேற்கின்றது’’ என்று செய்தி வெளியிட்டது.

     அதுபோலவே,
நவம்பர் 12ந் தேதியிலேயே, காமன் வெல்த் மாநாட்டில் பங்கேற்க இந்திய வம்சாவழியினரும் டான்சானியாவில் பிறந்தவரும், தற்போது கனடாவின் நாடாளுமன்ற உறுப்பினரும் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்தின் பாராளுமன்ற செயலாளருமாக இருக்கும் திரு. தீபக் ஓபராய் தலைமையிலான கனடா நாட்டு குழு ஒன்று இலங்கை வந்து சேர்ந்துள்ளது.

    நேற்று, ஆனையிரவுப் பகுதியில் போரில் உயிர் நீத்த இலங்கைத் தமிழ் மக்களுக்கு திரு.தீபக் ஓபராய் மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்திய செய்தியைப் படத்துடன் அந்நாட்டு தமிழ் பத்திரிகை ‘உதயன்’ வெளியிட்டுள்ளது.

    
ஆயினும், ஆச்சர்யமாக, காமன் வெல்த் மாநாட்டில் கனடாவின் பங்கேற்பு குறித்த செய்திகளை எந்த இந்திய ஊடகங்களும்
வெளியிடவில்லை.

     வெளியிடாதது ஏன் ? எதற்காக??

     ‘ இந்தியாவை, இந்திய அரசை, அதன் பிரதமரை, ஆளுகின்ற கட்சியை ஏனையோருக்கு  குறைத்துக் காட்டுவதற்காகவோ ’ எனும் ஐயம் எனக்கு எழுகின்றது.

Monday 11 November 2013

‘‘ உங்கள் வீட்டுப் பெண்ணாக இருந்தால் இப்படித்தான் வெளியிடுவீர்களா? ’’ இசைப்பிரியாவின் சகோதரி கேள்வி.


        ‘‘ உங்கள் வீட்டுப் பெண்ணாக இருந்தால் இப்படித்தான்     
     வெளியிடுவீர்களா? ’’  இசைப்பிரியாவின் சகோதரி கேள்வி.
                                                                    ~~~~~~~~~~



   இறுதிக்கட்டப் போரின்போது இலங்கைப் படையினரால்   பிடிக்கப்பட்டு படுகொலை   செய்யப்பட்ட தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் போராளி   இசைப்பிரியாவின் குடும்பத்தினர் சார்பாக அவரது சகோதரி  திருமதி தர்மினி வாகீசன் தமிழ் ஊடகங்களுக்கு அண்மையில் விடுத்துள்ள அறிக்கை :-
     “கடந்த நான்கு ஆண்டுகளாகஇசைப்பிரியா’  எனும் புனைப்பெயரைக் கொண்ட எனது தங்கையான, மறைந்த தமிழ்மொழி ஊடகவியலாளர்சோபனா அருட்செல்வன்’ அவர்கள் தொடர்பான செய்திகள், பெரும்பாலான செய்தி ஊடகங்களில்  வசதிக்கேற்ப  கதையமைக்கப்பட்டு  வெளியிடப்பட்டு வருவதை அவதானிக்கக்கூடியதாகவுள்ளது. இதனைத் தொகுப்பவர்கட்கு இசைப்பிரியாவைப் பற்றி எதுவும் தெரியுமா?
        அன்றி இசைப்பிரியாவுடன் இறுதிநாளிலே நந்திக் கரையோரம் இவர்களும் இருந்தார்களா? எப்படி உங்களால் இது முடிகிறது ? ! என்பது தெரியவில்லை. தமிழன் என்பவன் வீரத்துடன் மானத்தையும், பாசத்தையும் ஒருசேரப் போற்றுபவன்தமிழ்  ஊடகங்களும் அதற்கு சான்று   பகர்வனவாகவும், அவற்றை வளர்ப்பவைகளாகவும்  அமைய வேண்டும்.
         இசைப்பிரியா என்பவள் ஒரு கற்பனை கதாப்பாத்திரமல்ல. உயிருடன் சிறப்பாக வாழ்ந்து, நம் தமிழ் சமூகத்திற்காகவே உயிர்நீத்த ஒரு தமிழ்ப் பெண்.
     ஒரு பெண்ணைப்  பற்றிய செய்தியை எப்படி வெளியிட வேண்டும்   என்ற நாகரிகம் ஒரு ஆறறிவு படைத்த மனிதனுக்குஅதுவும்  ஊடக சமூகத்திற்கு நிச்சயம் இருக்க வேண்டுமென நான் எதிர்பார்க்கின்றேன். அரை உடலை மறைத்து ஆடை அணிவதை நாகரிகமாகக் கொண்ட  ஆங்கில ஊடகங்களுக்கு தெரிந்த  ஊடக தர்மம், என்  தாய்மொழி  ஊடகங்களுக்கு   தெரியாமலிருப்பது  பெருத்தஅவமானத்தையும்மனவருத்தத்தையும்   அளிக்கின்றது.
தேசியத் ( தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் )தலைவர் காலங்களிலே, சிங்கள  இராணுவப்   பயங்கரவாதிகளால் போராளிகளும்   பொதுமக்களும் சந்தித்த பல போர் விதிமீறல்கள்   புகைப்படங்களாகவும், ஒளிநாடாக்களாகவும் அமைக்கக் கூடிய சூழல்கள் இருந்தன. பாரிய சண்டைகள் இராணுவ முன்நகர்வுகளின் போது இலங்கை இராணுவத்தினால் கைப்பற்றப்பட்டு, விடுதலைப் புலிகள் அமைப்பிடம் சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் மூலம் ஒப்படைக்கப்படும் வித்துடல்கள் (போரில் இறந்தவர் உடல்) பல மிகவும் மோசமான நிலையில் கேவலப்படுத்தப்பட்டிருக்கும்.
அவற்றையெல்லாம்  ஒளிப்படமாக்கி அவர்கள் உயிருடன் வாழ்ந்த காட்சிகளுடன்இணைத்து  வெளியிடத்  தெரியாதவைகளா(க)வா  விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் இருந்தன. அவர்கள் ஏன் அதனைச்  செய்யவில்லைதமிழ்  ஊடக  சகோதரர்களே  நீங்கள் இன்று  என்ன செய்கிறீர்கள்? இதிலிருந்து  நாம் அறிந்துகொள்ள வேண்டிய செய்தி தான் என்ன ?
     இசைப்பிரியா அவர்கள் ஒரு தமிழ்ப்பெண். ஒரு இளம் தாய், ஒரு குடும்பப்பெண். பல் திறமைசாலி, எல்லா வளமும் நிறைந்த சூழலில், குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவள். அவர்களுக்கென்று பெற்றோர், சகோதரிகள், பிள்ளைகள் என எல்லா  உறவுகளுமே உண்டு. அவற்றையும்  விட  தமிழீழ தேசியத் ( தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் )தலைவரின்  வளர்ப்பிலே இணைந்து  பத்தாண்டிற்கு மேலாக  ஊடகப் போராளியாக வலம்  வந்து  தலைவரதும்   தமிழ் மக்களதும் நன்மதிப்பை பெற்றவள்.
கடும்போர் சூழ்ந்து பதுங்கு குழிகளை வாழ்விடமாக்கி முதுகு வளைந்து மக்கள் நடமாடிய காலத்தில் கூட, அவள் தன் குழந்தைகளையும் மறந்து உறவிழந்து தவிப்போரையும், காயமடைந்து மருந்தின்றி தவிப்போரையும் ஆற்றுப்படுத்துவதிலேயே தன் நாட்களைக் கழித்தாள். அவளின் பாசமான வார்த்தைகளை என்றுமே எம் தமிழ் உறவுகள் மறக்க மாட்டார்கள்.
ஊடக சகோதரர்களே!
அவளை நீங்கள் அறிந்திருந்தால்தானே அவளது மென்மையும், தாய்மையும், சகோதரப் பாங்கும் உங்கட்குப் புரியும். பூவினும் மென்மையான அந்தத் தாயின் காட்சிகளை கண்களுக்கு விருந்தளிக்கும் காட்சிகளாக்க உங்களுக்கு எப்படி மனம் ஒப்பியது. அவளது சகோதரியானதால் நான் மட்டுமல்ல தாயகத்தே அவளை நேசித்த தாய்மடி உறவுகளும் உங்கள் பொறுப்பற்ற செயலை கண்டித்த வண்ணமே உள்ளார்கள்.
சிங்கள அரச பயங்கரவாதத்தினால் நடத்தப்பட்ட இறுதி தமிழின அழிப்பு நடவடிக்கையின்போது உயிருடன் பிடிக்கப்பட்டு இசைப்பிரியா படுகொலை செய்யப்பட்டார். ( தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் பலைவரின் மகள்) துவாரகா விலிருந்து மாறுபட்ட தோற்றமுடையவளாக இசைப்பிரியா இருந்திருந்தால் கூட சிங்களக் காடைகள் அவளை உயிருடன் விட்டிருக்கப்போவதில்லை. இந்தத் தகவலே போர் விதி மீறலுக்குப் போதுமான ஆதாரமாகும்.
சனல்-4 ஒரு காணொளியை   வெளியிட்டால் உடனேயே   அதற்கொரு கதை, வசனம், நெறியாள்கை செய்து சினிமாப் படமாக வெளியிடுகின்றீர்கள். சினிமாப் படங்களுக்குக் கூட ஒரு தணிக்கை உள்ளது. உங்கள் வீட்டுப் பெண்ணாக இருந்தால் இப்படித்தான் வெளியிடுவீர்களா?
உங்கள் வீட்டுப் பெண்கள் உங்களிடம் இதுபற்றி மனம் வருந்தவில்லையா? உங்களது இந்த அபரிதமான அத்துமீறல்களையிட்டு இசைப்பிரியா குடும்பம் சார்பாக எனது அதிருப்தியையும், மனவருத்தத்தையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.
இவ் ஒளிநாடாக்களை சிங்களவனிடமிருந்து பெற்று அதில் உள்ளவற்றை பொறுப்பற்ற முறையில் பிறரிடம் கையளித்த தமிழ் உறவுகளிடமும் எமது மன வருத்தத்தினை இவ்விடத்திலே நாம் தெரியப்படுத்த விரும்புகின்றோம். இதில்  சம்பந்தப்பட்டிருப்பது  உங்கள் அனைவருக்காகவும்  மடிந்த  ஒரு தமிழ்ப் பெண்ணின் மானம்’   என்பதை  ஏன்  நீங்கள் சிந்திக்க  மறந்தீர்கள்அவளது   தியாகத்தை ஏன் இப்படி அசிங்கப்படுத்துகின்றீர்கள்.
    விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகளென இணையங்களில் தோன்றுபவர்களே.. உங்களுக்கும் இது தோன்றவில்லையா?? இதற்கான உங்கள் முன்னெடுப்பென்ன?? அவளின் பெயரை சொல்லி புகைப்படங்களில் காட்சி கொடுக்கும்  நீங்கள், அசிங்கமான காட்சிகளை தணிக்கை செய்யவேண்டுவதிலும் எமக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமெனக் கேட்டுக் கொள்கின்றேன்.
தமிழர் மீதான, உலகறிய நடத்தப்பட்ட இனவழிப்பு நடவடிக்கையை பகிரங்கப்படுத்தி, இலங்கை அரசுமீது போர்க்குற்ற விசாரணையை நடத்த உலகைத் தூண்ட வேண்டியது ஒடுக்கப்பட்ட இனத்தின் பிரதிநிதிகளான எமது கடமையாகும். ஆனால், சம்பவக் கோர்வைக்காகவும், வியாபார நோக்கு, சுயஇலாபம் கருதியும் உங்கள் மனத்தே எழும் கற்பனைகளையும், யூகங்களையும் கருவாக்கி ஒளிப்படங்களுக்கேற்ப கதையெழுதும் பொறுப்பற்ற சில தமிழ் ஊடகங்களின் செயற்பாடானது எமக்கு மிகுந்த மனவேதனை அளிக்கின்றது.
53வது படையணிக்கு கட்டளையிட்டவர்களும், படைப்பிரிவு அமைப்பவர்களும் போல் உங்கள் திறமையைக் காட்ட நீங்கள் எழுதும் வார்த்தைகள் எம் இதயங்களை ஈயக்குண்டுகளாக ரணமாக்குகின்றன. இசைப்பிரியாவையும், வேறு குடும்ப உறவுகள் மூவரையும் இழந்து நான்கரையாண்டுகளாக வளமிகு எம் தாய்நாட்டை விட்டு நாதியற்றலையும் எங்களை, நீங்களுமா துன்பப்படுத்த வேண்டும்.
     ஊடகக் கோட்பாடுகளயும், அறநெறிகளயும் மீறிய சில தமிழ் ஊடகவியலாளர்களதும் அவர்கள் நடத்தும் இணையங்களதும் செயற்பாடானது பொறுப்புணர்வுடனும், அர்ப்பணிப்புடனும் செயற்படும் ஏனைய தமிழ்த் தேசிய ஊடகவியலாளர்களையும் சேர்த்தே பாதிக்கின்றது என்பதை ஒரு ஊடகப் போராளியின் சகோதரி என்ற முறையில் இங்கு சுட்டிக்காட்ட விரும்புகின்றேன்.
      இசைப்பிரியா எம் குடும்பத்தின் அன்பு தேவதை, இசைப்பிரியா தமிழினத்தின் ஒட்டுமொத்த வலிக்கான உணர்வாதாரம். இசைப்பிரியா பூசிக்கப்பட வேண்டிய ஒரு தமிழ்த்தாய். அவளை சிங்களவனுடன் சேர்ந்து நீங்களும் அசிங்கப்படுத்தாதீர்கள்.  சக ஊடகவியலாளர்களதும், அவரது குடும்பத்தாரதும் உணர்வுகட்கு மதிப்பளியுங்கள்.
        இசைப்பிரியா சார்பாகவும், அவரது குடும்பத்தினர் சார்பாகவும் எனது உணர்வுபூர்வமான வேண்டுகோள் என்னவென்றால், இன்று முதல் இசைப்பிரியா தொடர்பான பொதுவில் தவிர்க்கப்படவேண்டிய ஒளிப்படங்களையோ, காணொளிகளையோ, சம்பவ யூகக் கற்பனைகளையோ வெளியிடாதீர்கள். இசைப்பிரியா சிங்கள இராணுவத்தினரால் உயிருடன் கைது செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டார். இவ்வளவு தகவலுமே போதுமானது.
       எமது இவ் வேண்டுகோளை நீங்கள் ஏற்றுக்கொள்வீர்கள் என்றும் எம்மை சட்ட நடவடிக்கை நோக்கி செல்லும் சந்தர்ப்பத்திற்கு ஆளாக்கமாட்டீர்கள் என்றும் நம்புகின்றேன்.
-குடும்பத்தினர் சார்பாக திருமதி தர்மினி வாகீசன் .

          உணர்வுபூர்வமானவர்கள்தமிழர்கள் என்ற உண்மையை அறிந்துகொண்டு அவ்வுணர்வுகளை தாம் விரும்பும் திசையில் பயணிக்கவைக்கப் பலர் முயன்று அதில் வெற்றியும் பெறுகின்றார்கள் என்பது எனது கருத்து.

       
சகோதரி குறிப்பிடுவது போல வீரத்துடன் மானத்தையும் ஒருசேரப் போற்றுபவர்கள் தமிழர்கள் என்பதை ஒருகணமும் தமிழர் மறத்தலாகாது.  இனியாவது மறக்காதிருப்போம்.

(அடைப்புக் குறிகளுக்குள் இருப்பவை, அனைவரும் புரிந்துகொள்ள, என்னால் பதிவேற்றப்பட்டவை)