Wednesday 13 February 2013

எதை நோகுவது ! காதலை எண்ணி நோகுவதா? காலத்தை எண்ணி நோகுவதா?


                      
                          எதை நோகுவது !
  காதலை எண்ணி நோகுவதா? காலத்தை எண்ணி நோகுவதா?
            
                           ~~~~~~~~~~~~~~

    
வீட்டுக்குப்போனதும் பாய்யோட கேசுக்கு ஆட்சேபனை எழுதனும்..  
என்னது இது புதுவிதமாயிருக்கு…சுடிதார் போட்டுகிட்டு புத்தம்புது மஞ்சள் தாலிய தொங்கவிட்டுகிட்டு… ஒரு பைய்யனின் கையைத் தன் இருகைகளாலும் பற்றி நின்றிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தபோது விளங்காத காட்சியாய் தோன்றியது. என்னத்தையோ ஜெயிச்சுட்டதுபோன்ற தோரணையில் அந்த பைய்யன்!

  
  வராண்டாவில் வேகமாய் நடந்த நான் நடையைத் தளர்த்தி அங்கே நின்றிருந்த பி.சியை
என்ன கேஸ் என்று ஜாடையில் கேட்க அருகே வந்தவர் கேர்ள் மிசிங் கேஸ் சார், விசரணையில பொண்ணு அந்த பைய்யனோட போய் கல்யாணம் பண்ணிகிட்டுதுன்னு தெரிஞ்சுது, அதான் ஐய்யாகிட்ட ப்ரொடுயூஸ் பண்றோம். நம்ம  …………. வக்கீல்தான் பைய்யனுக்கு  ஆஜராகிறார், அதோ அவங்கதான் அப்பா அம்மா’.

      அவர் காட்டிய இடத்தில், கலைந்த தலையோடு, தூக்கமில்லாத கவலையான முகத்தோடு ஒரு அப்பா அம்மா. அவர்களை நோக்கி இவர் கைகாட்டிப் பேசவும் அந்த அப்பா ஓடிவந்தார்.
அய்யா, அவனோல்லாம் கூடிதான் இப்படி பண்ணிபுட்டாங்கயா..ஒண்ணும் தெரியாத புள்ளைங்க எம்புள்ள கேட்காமலேயே சொன்ன, எந்நேரத்திலும் சிந்தக் காத்திருக்கும் கண்ணீர் நிறைந்த அவரின் கண்களைப் பார்க்க மனமில்லாமல் அந்தப் பைய்யனருகில் இருந்தவர்களைப் பார்த்தேன். அவனின் வயதொத்தவர்கள்தான், எதையோ சாதித்துவிட்ட கும்மாளமாய்.

     
நகைகூட போனாபோவதுங்க புள்ள திரும்பி வந்தா போதும்ங்க.  நல்லா படிக்கிற புள்ளங்க.. அடுத்த புள்ள இன்ஜினீர் படிக்குதுங்க.. என்றவரிடம் ஆணா, பெண்ணா? ன்னு கேட்க நினைத்து மேலும் கவலைப்படுத்த விரும்பாது கேட்காமல் விட்டேன்.

   
ஏங்கய்யா… ஜட்ஜய்யா எங்ககூடத்தானேய்யா புள்ளய அனுப்புவாறு? என்றவரிடம் போலியான தைரியத்துடன் ஆமாம், ஆமாம், அவர்  கோர்ட்லேர்ந்து இறங்கியதும் ரூமில வச்சு விசாரிச்சுட்டு உங்கக்கூடத்தான் அனுப்பிவிடுவாரு என்றதும்  கையெடுத்துக் கும்பிட்டார் அந்த அப்பாவி மனிதர்.
    
      
மேஜரான பெண். அவள் விருப்பப்படிதான் அனுப்புவாங்க        பெண்ணை விசாரிக்க எப்படியும் ஒரு மணி நேரத்துக்கு மேலாகும். அதுவரை இவர் கவலையில்லாது இருக்கட்டுமேயென்று எனக்குத் தோன்றியது.

      யாரென்றே அறியாத  எனக்கு அவரை சிறிது நேரமாவது கவலைப்படாமல் வைத்த திருப்தி. ஆ..…மா….ம்… இதுமாதிரி ஏன் அந்த மகளுக்கு தோணாமல் போச்சு ?.

          
காதலை எண்ணி நோகுவதா? காலத்தை எண்ணி நோகுவதா?

                       &&~~~~~~~~~~~~~~~~~~~~~~&&

Thursday 7 February 2013

தமிழும் தமிழரும்- 3.


தமிழும் தமிழரும்- 3.
  பல்வேறு மொழிகளிலிருந்தும் ஏராளமான சொற்களைக் கடன்கொண்டிருப்பதால், ஆங்கில மொழி எக்கருத்தையும் தெரிவிக்கவல்ல மொழியாகக் கருதபடுகின்றது, புகழப்படுகின்றது.

        ஆனால், இந்த நூற்றாண்டிலும், ஆங்கிலத்தில் அல்லது அதைப் போன்ற பிற பெருமொழிகளிலும் இல்லாத பல சொற்கள் கி.மு. 3000 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ் மொழியில் இருந்தது மிகமிக வியக்கத்தக்கதுதானே!

    கன்னடத்தில்
இலக்கியம் தோன்றியது கி.பி. 8ஆம் நூற்றாண்டென்றும், தெலுங்கில் தோன்றியது கி.பி. 10ஆம் நூற்றாண்டென்றும், மலையாளத்தில் தோன்றியது கி.பி. 13ஆம் நூற்றாண்டென்றும் சொல்லப்படுகின்றது.    

   ஆனால்,
தமிழிலக்கியம் தோன்றிய காலம் இன்ன நூற்றாண்டென்று வரையறுத்துக் கூற இயலாதவாறு, அத்துணைப் பழைமையாயிருத்தலால், திராவிட மொழிகளில் தமிழே,  அது மொழியாயினும் நூலாயினும், - மிகத் தொன்மை வாய்ந்தது என்பதைச் சொல்ல வேண்டுவதேயில்லை!

தமிழின் திருத்தம்
  திராவிட மொழிகளுள் தமிழ்மொழி மிகத் திருந்தியதென்பது, அதன் சொல் வடிவங்களாலும் இலக்கணச் சிறப்பாலும் அறியப்படும்.

தமிழ்ச்சொல்
வளம்
  தமிழின் சொல்வளத்தைத் தமிழரே இன்னும் சரியாய் உணராதிருப்பது வேதனையே!.
      ‘இலை’ என்னும் ஒரேயொரு உறுப்பிற்கு நான்கு வெவ்வேறு சொற்கள் உள்ளன.
 
   
மா, வாழை முதலியவற்றினது இலை யென்றும், நெல் கேழ்வரகு முதலியவற்றினது தாள் என்றும், கரும்பு, பெருஞ் சோளம் முதலியவற்றினது தோகையென்றும், தென்னை பனை முதலியவற்றினது ஓலையென்றுங் கூறப்படும்.
 
     பூ
என்னும் பொதுப்பெயரை மட்டுமே அனைவரும் அறிவர். ஆயினும் செடி, கொடி, மரம் இவற்றில் தோன்றும் பூ , அது முதலாவதாய் தோன்றும்போது  அரும்பு’ என்றும், பின்னர் அது பேரரும்பானபோது போது’ என்றும், அதுவே மலர்ந்தபின்மலர்’ என்றும், பின்னர் விழுந்தபின்வீஎன்றும், வாடியபின் செம்மல் என்றும் கூறப்படும்.

  
  அரும்பு
என்னும் ஒரு நிலைக்கே, அதனதன் அளவுக்குத் தக்கபடி, அரும்பு, மொட்டு, முகிழ், முகை, மொக்குள் என வெவ்வேறு சொற்களும்
உள்ளன.

  
பூக்கள்
கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என நால்வகையாக வகுக்கப்படும். இவற்றுடன், செடிப்பூ என்பதொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

   
  காயின்
வெவ்வேறு நிலைகள் பூம்பிஞ்சு, திருகுபிஞ்சு, இளம்பிஞ்சு, பிஞ்சு, அரைக்காய், காய், முக்காற்காய், கன்னற் காய் அல்லது பழக்காய், கடுக்காய் அல்லது கருக்காய் என வெவ்வேறு சொற்களாற் குறிக்கப்படுகின்றன.
     மாம்பிஞ்சு வடு என்றும், பலாப்பிஞ்சு மூசு என்றும் விதப்பித்துக் கூறப்படுகின்றன.

    
  பருவத்திற்
காய்ப்பது பருவக்காய் என்றும், பருவ மல்லாத காலத்திற்
காய்ப்பது வம்பக்காய் என்றும் கூறப் படுகின்றன.

    
முதிர்ந்தபின்
கனிவில்லாதது காய் என்றும், கடினமானது நெற்று என்றும் கூறப்படுகின்றன.
 
    
செவ்வையாய்ப்
பழுக்காத பழங்கள், வெவ்வேறு காரணம் பற்றிச் சிவியல், சூம்பல், வெம்பல், சொத்தை எனப் பலவகையாகக் கூறப்படுகின்றன. இவற்றுள், சொத்தைவகை சொண்டு, சொத்தை, சொட்டை எனப் பல பெயராற் கூறப் படுகின்றது. சொத்தையான மிளகுப் பழம் அல்லது வற்றல் சொண்டு என்னுஞ் சொல்லால் மட்டும் குறிக்கப்படுதல் காண்க.
 
     
பழத்தின்
தோல்வகைகளுக்கு, அதனதன் வன்மை மென்மைக்குத் தக்கபடி தொலி, தோல், தோடு, ஓடு, சிரட்டை எனப் பல பெயர்கள் உள்ளன.
        விதை வகைக்கு வித்து, விதை, மணி, முத்து, கொட்டை என வெவ்வேறு சொற்கள் உள்ளன.

             இங்ஙனம்,தமிழில் ஒவ்வோர் உறுப்பிற்கும் பற்பல சொற்கள் உள்ளன!

       இனியாவது தமிழ் மொழியின் வளம் அறிந்து போற்றுவோம்!

       இதே நாளில் (7-2-1902) ல் பிறந்து மொழிஞாயிறாய் திகழ்ந்த தேவநேயப்பாவாணர் அவர்களின் நினைவேந்தி அவரது ஆய்வைப் பகிர்ந்தேன்! ஓங்கட்டும் அவர் புகழ்!