Saturday 13 April 2013

ஒருமுறை திரும்பிப் பார்ப்போமா… ‘ஜாலியன்வாலா பாக் படுகொலை’.



ஒருமுறை திரும்பிப் பார்ப்போமா… ‘ஜாலியன்வாலா பாக் படுகொலை’

      இன்று 2013 ஏப்ரல் 13ந் தேதி…. 94 ஆண்டுகளுக்கு முன் இதே நாளில் பஞ்சாப் மாநிலம், ஜாலியன்வாலா பாக் எனும் இடத்தில் நடந்தததை ஒருமுறை திரும்பிப் பார்ப்போமா…  
     
      மாலை வேளை.. துப்பாக்கி குண்டுகளின் சத்தம் ரத்ன தேவிக்கு குலை நடுங்க வைத்தது…..அதுவந்த திசையில்தானே கணவர் போனார்..வாரிச் சுருட்டிக்கொண்டு ஓடினாள்…

      ஓடிப்போய் பார்க்க..அந்த இடமே அல்லோலகல்லோலப்பட்டது. அவளுக்குமுன் ஓடிய இரு பெண்கள்… நெஞ்சில் அடித்துக்கொண்டு ஓலமிட்டு அழ…கண்முன் விரிந்தகாட்சி..ரத்தவெள்ளத்தில் எங்கும் மனித உடல்கள்…

      தன்னையறியாமல் உடல்களைத் தாண்டி தேடத் துவங்கியவளுக்கு கிடைத்தது கணவனின் உயிரற்ற உடல்...வாரியெடுத்து நெஞ்சோடு அணைத்து ஓவென்று குரலெடுத்துக் கண்கள் இருளக் கதறினாள்…..

    அவளின் நீர் நிரம்பிவழிந்த கண்களில் மீண்டும் காட்சியும் பிரக்ஞையும் வந்தபோது எங்கும் இரவின் இருட்டு..வரண்டுபோன தொண்டையோடே ‘இவரை தூக்கிட்டுபோக யாரவது ஒரு கயித்துகட்டில் கொண்டுவாங்களேன்’.... என ஓங்கி இரைஞ்சினாள்.

    யாரோ போகும் சத்தம் கேட்டது… நடுநெசியாகியும் யாரும் வரவில்லை..அவ்வவ்போது அங்கொன்றும் இங்கொன்றுமாய் உயிருக்கு போராடும் ஜீவ அவலக்குரல்கள்..இடைவிடாத நாய்களின் சத்தம்.. இரவின் நிசப்தத்தில்.. பயத்தில் தன் கையில் கிடைத்த எதையோ எடுத்து நாய்களை விரட்டினாள்..

     ரண வேதனையில்
யாரோவொரு சிறுவன் மிக அருகில் இருப்பதை பார்த்து ஆதரவாய் இவள் கொடுத்த குரல்கேட்டு “பயமாருக்கு என்ன தனியே விட்டுட்டு பொய்டாதீங்க” என்று மீண்டும் மீண்டும் வலியுடனே அவன் அரற்றியது இவளைப் பிழிந்தது.. ‘இல்ல போகமாட்டேன் என் கணவர் உடலை விட்டுட்டு போகமாட்டேன்’ என்று திரும்பத்திரும்ப சொன்னாள்…. ‘குளிருதா, வேணும்னா என் துப்பட்டவால் உன்னை போர்த்திவிடவா’ என்றாள்..

      அவன் குடிக்க தண்ணீர்கேட்டான்..ஆனால் ரத்தம் தவிர வேரெதும் அங்கில்லை….ஒவ்வொரு மணிக்கும் தொலைவில் இருந்த மணிக்கூண்டின் இயந்திர ஒலி…

   இரண்டு மணியளவில் யாரோ தன் கால்களை விடுவிக்கக் கெஞ்ச..தட்டுத்தடுமாறி குரல் வந்த திசையில் போய்.. ரத்தம் தோய்ந்த அந்த நபரின் ஆடையை பிடித்து இழுத்து விடுவித்தாள்..

   அதிகாலை 6 மணிக்கு யாரோ அவளைத் தூக்கியபோது எங்கும் சொந்தங்களைத் தேடுவோரின் அழுகுரல்கள் ஒலித்துக்கொண்டேயிருந்தது…

       இது கதையல்ல அப்பெண் தன் அவல நிலையை நினைவுகூர்ந்து வெளிவந்த ஒரு நிகழ்வு. இந்த நிகழ்வும் அதன் பின்புலமும் இன்று ஒரு சிலருக்கே தெரியலாம்…..அது ஜாலியன்வாலா பாக் படுகொலை- ஏப்ரல் 13, 1919…..
 என்னதான் நடந்தது?
    1919ல் ஆங்கிலேயர் ஆட்சியில், இந்தியாவில் ரவுளட் சட்டத்தை எதிர்த்து  சத்யாகிரக போராட்டம் உட்பட்ட பல போராட்டங்களை நாடு மேற்கொண்டும் ஆங்கிலேய அரசு அச்சட்டத்தினை அமல்படுத்த தொடங்கவே  1919 மார்ச் 30ந் தேதி நாடு தழுவிய போராட்டத்தினை காந்தி அடிகள் அறிவித்தார் பின்னர் ஏப்ரல் 6ந் தேதிக்கு மாற்றப்பட்டது..
     அறிவித்தபடி அன்று நாடுமுழுதும் முழு வேலைநிருத்தம் நடந்தது..

     பஞ்சாப் மாநிலத்தில டாக்டர் சத்யபால் டாக்டர் கிட்ச்லேவ் போன்ற இளம் தலைவர்கள் முன்னின்று செயல்படுத்தினர்…..

    ஆங்கிலேயப் பேரரசுக்கு முதல் உலகப்போரில் அதிக அளவில் உதவி கிடைத்தது பஞ்ஜாப் மாநிலத்திலிருந்துதான். இந்நிலையில், பஞ்சாபியர்கள் இப்படி ஆங்கிலேய அரசுக்கு எதிராக இறங்குவதை அம்மாநில கவர்னர் மைக்கேல் ஒ டையர் ஏற்கவில்லை…போராட்டக்கார்களை கடுமையாய் நசுக்கத் திட்டம் வகுத்தார்… விளைவு மோசமானது…
8/4/1919
    அமிர்தசரஸின் டெபுடி கமிஷ்னர் அமிர்தசரஸ் யார் வசம் இருக்கிறது என்பதை ஆணித்தரமாக நிருபிக்க கூடுதல் படை பலம் வேண்டினார்.
 
 9/4/1919
    அன்று ராம நவமி… நாட்டு மக்களின் ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்க, அமிர்தசரஸில் இந்துக்களும் முஸ்லிம்களும் சேர்ந்து  அன்றய நாளை தேசிய ஒருமைப்பாட்டு நாளாக நகரில் பெரும் ஊர்வலம் நடத்திக் கொண்டாடினர்.. அமைதியாக ராம நவமி நடந்து முடிந்தும்கூட, கவர்னரின் உத்தரவின் பேரில் டாக்டர் சத்யபால் டாக்டர் கிட்ச்லேவ் ஆகியோர் கைதுசெய்யப்பட்டனர்.
10/4/19
   அவர்கள் இமாச்சல மாநிலத்திலுள்ள தரம்சாலாவிற்கு கொண்டு செல்லப்பட்டனர். காந்தி பஞ்சாப் மாநிலத்திற்குள் வருவது தடை செய்யப்பட்டது..
     தலைவர்கள் கைது செய்யப்பட்ட  செய்தி காட்டுத்தீயாய் பரவ பகல் 11.30 மணிக்குக் கடைகள் அடைக்கப்பட்டன.
   அமிர்தஸரஸ் கோட்டைக்குள் பீரங்கிகளும் துப்பாக்கிகளும் தயார் நிலையில் வைக்கப்பட்டன. கைதான தலைவர்களை விடுதலை செய்யக் கோரி டெபுடி கமிஷனரின் வீடு நோக்கி புறப்பட்டனர் மக்கள்..போகும் வழியில்..  புகழ்பெற்ற ஹால் பிரிட்ஜ்க்கு ஒரு பகுதியில் மக்கள்.. எதிர்புறத்தில் தடுத்து நிறுத்த குவிக்கப்பட்ட போலீஸ்.

  அதுவரை அசம்பாவிதம் ஏதுமில்லை..காவலரை தாண்டிச்செல்ல மக்கள் முற்பட்டனர்.. குதிரையினின்று இறங்கிய இரு காவலர்கள் எவ்வித முன்னறிவிப்பின்றி சுடத்தொடங்கினர்.. சுடப்பட்டு சுருண்டுவிழுந்தனர் ஒருசிலர்.. இருப்பினும் கூட்டம் கலையாமல் நின்றிருந்தது.

   கூட்டதிலிருந்து ஓரிரு கற்கள் காவலர் மேல் விழ காத்திருந்த படை சுட்டுத் தள்ளியதில் 20 பேர் மாண்டனர். காயமடந்தோர் ஏராளம்..
     காட்டுதீயாய் பரவிய இச்செய்தி கலவரத்தில் முடிந்தது. கண்ணில் பட்ட ஆங்கிலேயர்கள் தாக்கப்பட்டனர். அதில் சிலர் உயிரழ்ந்தனர். மிஸ்.ஷெருட் என்ற பெண்மனி தாக்கப்பட்டாலும் ஒரு இந்தியரே அவரையும் காப்பற்றினார்.
 
11/4/1919
     அமிர்தஸ்ரஸ் முழுதும் ஊரடங்கு ஆணை பிறப்பிக்கப்படது. கலவர்த்தில் இறந்தோரின் சடலத்தினை எடுத்துச்செல்ல 4 பேருக்குமேல் அனுமதியில்லை.

    கலவரத்தி அடக்க அன்று மாலை பிரிகேடியர் ஜெனரல் டயர் அமிர்தஸரஸ் வந்துசேர்ந்தார்.
12/4/19
   ஜெனரல் டயர் 125 பிரிடிஷ் மற்றும் 310 இந்திய வீரர்களோடு நகரெங்கும் அணிவகுப்பு மேற்கொண்டார்.
  
   மாலை 4 மணிக்கு இந்து சபா உயர்நிலைப்பள்லியில் நடந்த கூட்டத்தில் மறுநாள் ஜாலியன் வாலா பாகில் பெரும் பொதுக்கூட்டம் நடத்துவது எனவும் அக்கூட்டதில் சிறையில் உள்ள தலைவர்கள் எழுதிய கடிதங்கள் படிக்கப்படுவது என்றும் முடிவெடுக்கப்பட்டது.

    அக்கூட்டத்தில் பேசியவர்கள் நடந்து முடிந்ததைவிட இன்னும் பெரிய தியாகங்களுக்கு மக்கள் தயாராகவேண்டும் என்றனர்.
ஏப்ரல்13-1919
    அன்று 'பைசாகிப் பண்டிகை' - அறுவடைத் திருநாள்…சீக்கியர்களின் புனித நாளும் கூட…
      இதை பிரிட்டிஷ் அதிகாரிகள் நன்கு அறிவார்கள். அன்றய நாளில் பல்லாயிரக்கணக்கான மக்கள் அமிர்தசரஸ் பொற்கோயிலுக்கு போவர்கள் என்றும், அங்கிருந்து சமீபம் தான் பொதுக்கூட்ட இடமான ஜாலியன்வாலா பாக் என்பதால் அவர்கள் கோயிலிருந்து நேராக அங்கு செல்லக்கூடும் என்பதையும் அதிகாரிகள் நன்கு அறிவார்கள்.
 
      காலையிலேயே தன் படை பலத்தினை பறைசாற்றும் விதமாய் ஜெனரல் டயர் நகரினை வலம் வந்தார். அவர் போன இடமெல்லாம் ஆங்காங்கே தம்பட்டம் தட்டி ஊரடங்கு கடைபிடிக்க அறிவிப்பு செய்யப்பட்டது.

  
  டயரின் படை நகர்ந்த உடன் இளஞ்ஞர்கள் காலி டின்களை தட்டி மாலை 4.30 மணிக்கு பொதுகூட்டம் நடக்க இருப்பதை பறைசாற்றினர்.

      பிற்பகல் 2 மணி முதலே ஜாலியன் வாலா பாகில் மக்கள் கூட ஆர்ம்பித்தனர்.

     மாலை 4 மணிக்கு ஜெனரல் டயருக்கு பெருந்திரளாய் மக்கள் திரண்டிருந்த செய்தி கிட்டிற்று..
     இரண்டு பீரங்கி வண்டி, ஒரு கார், 400 வீரர்கள் கொண்ட தன் படையோடு டயர் கூட்டம் நடக்கும் ஜாலியன் வாலா பாக் நோக்கி புறப்பட்டார். வழியெங்கும் ஆங்காங்கே சிறு சிறு அளவில் படைப்பிரிவினர் நிறுத்தப்படனர்.

     குறுகிய சந்தின் வழியே வண்டிகள் செல்ல முடியாததால் எஞ்சிய 50 இந்திய வீரர் மற்றும் 40 கூர்க்கா படையினரோடு அவர் பொதுக்கூட்ட இடத்தினை அடைந்தபோது அங்கு ஏறத்தாழ இருபதாயிரம் பேர் கூடியிருந்தனர்.

  ஒருவர் நடுவே உறையாற்றிக்கொண்டிருந்தார் அமைதியான முறையிலேயே கூட்டம் நடந்துகொண்டிருந்தது..

   ஜாலியன் வாலா பாக் எனும் அந்த இடம் மேடு பள்ளமான பகுதி நடுவில் பாழடைந்த கிணறு…சுற்றிலும் வீடுகள் சூழ ஒன்றிரெண்டு சிறு சந்துகள் மட்டுமே வெளியே செல்லும் விதமான ஒரு இடம்..             
  
  அங்கு போய் சேர்ந்தவுடன் தன் இருபக்கமும் தலா 25 வீரர்களை நிறுத்தி எவ்வித முன்னறிவிப்பும் கொடுக்காமல் கூட்டத்தினரை நோக்கி சுட உத்தரவிட்ட  டயர், தன் படை கொண்டு வந்திருந்த துப்பாக்கி குண்டுகள் தீரும் வரை சுடச் செய்தான்..
  
   மக்கள் ஓடிய பக்கமெல்லாம் குறிபார்க்கப்பட்டனர்…சிலர் செய்வதறியது கிணற்றில் குதித்தனர்…
   மாலை 5.30 மணிக்கு அவன் அங்கிருந்து புறப்பட்டபோது சுமார் 2000 பேர் மாண்டிருந்தனர்… பல்லாயிரம் பேர் குற்றுயிறாய்க் சாகக் கிடந்தனர்..
    மருத்துவர்கள் எவரும் அங்கு செல்ல அனுமதிக்கப்படவில்லை…
 
  அதிகாலைவரை உதவியின்றி ரத்தவெள்ளத்தில் பலர் துடித்து கிடந்து உயிர்துறந்தனர்.
   பல உயிர்களையும், கண்ணீரையும் விட்டுத்தான் இந்திய விடுதலைப் பயிர் வளர்ந்தது என்பதை உணர்வோம்……

    இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகளை வணங்குவோம் !