Friday 6 December 2013

சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த ‘மா மனிதன்’ மண்டேலா ! வானளாவி நிற்கட்டும் அவரின் புகழ் !



        சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த ‘மா மனிதன்’ மண்டேலா !
                வானளாவி நிற்கட்டும் அவரின் புகழ் !
                               ~~~~~~~~~~~~~~~

குடும்பமும் இயற்பெயரும் -

    
1918
ஆம் ஆண்டு ஜூலை மாதம் 18 ஆம் தேதி தென்னாப்பிரிக்க நாட்டில் உள்ள, தற்போது ஈஸ்டர்ன்கேப் மாகாணத்தில் அமைந்துள்ள ட்ரான்ஸ்கே நகர், வெஸொ(Mvezo) எனும் இடத்தில் மடிபா பழங்குடி இனத் தலைவரின் மகனாகப் பிறந்த திரு.நெல்சன் மண்டேலாவின்  இயர்ப்பெயர்ரோலிஹ்லஹ்லா மண்டேலா’ (Rolihlahla Mandela)என்பதாகும்.
     குணு (Qunu) எனும் இடத்தில் உள்ள பள்ளியில் அவரைச் சேர்த்த போது, பள்ளிக் குழந்தைகள் அனைவருக்கும் "கிரிஸ்துவப் பெயர்’’ கொடுக்கப் படவேண்டும் என்ற அந்நாட்டினது சம்பிரதாயத்திற்கு ஏற்ப மண்டேலாவின் ஆசிரியை அவருக்கு ‘நெல்சன்’ என்ற பெயரைச் சூட்டினார். அன்று முதல் அவர் ‘நெல்சன் மண்டேலா’ என்றே அறியப்படுகின்றார்.
கல்வி-
   ‘ஃபோர்ட் ஹரே’ பல்கலைக்கழகக் கல்லூரியில் பயின்றபோது மாணவர் போராட்டத்தில் கலந்து கொண்ட காரணத்தால் இளங்கலை பட்டப்படிப்பைத் தொடரக் கல்லூரியால் தடை விதிக்கப்பட்ட மண்டேலா
  பின்னர் தென்னாப்பிரிக்கப் பல்கலைக்கழத்தில் சேர்ந்து பி.ஏ.பட்டம் பெற்றார்.

       பின்னர் ஜோகன்னஸ்பர்க்கில் உள்ள ஒரு சுரங்கத்தில் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினார்.
   விட்வாட்டர்ஸ்ரண்ட் பல்கலைக்கழகத்தில் (University of Witwatersrand) சட்டம் பயில சேர்ந்து இடையிலேயே 1948ல் வெளியேறினார்.
    பின்னர், லண்டன் பல்கலைக்கழகத்தில் அதைத் தொடர முயன்றும் அப்பட்டப் படிப்பை முடிக்க இயலவில்லை அவரால்.
    பிற்காலத்தில், தனது சிறைச் சாலை வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் 1989ல் தென்னாப்பிரிக்கப் பல்கலைக்கழத்தின் வாயிலாகப் படித்து எல்.எல்.பி. (சட்டக் கல்வி) பட்டம் பெற்றார்.
உரிமைப் போராட்டமும் அரசியலும்-
   அக்காலத்தில், பூர்வகுடிக் கறுப்பு நிற மக்கள் பெரும்பான்மையாக வாழுகின்ற தென்னாபிரிக்க நாட்டினை, வந்தேறி சிறுபான்மையினரான, நிறவெறி கொண்ட வெள்ளையர்கள் ஆட்சி செய்து வந்தனர்.
    வெள்ளையரின் நிறவெறி, அடக்கியாளும், எதேச்சாதிகாரத் தன்மையை எதிர்த்து தனது 21 வது வயதிலேயேப் போர்கொடி உயர்த்தியவர் திரு.நெல்சன் மண்டேலா.
         வந்தேறிகளான, அடக்குமுறையாளர்களான, இனவாத வெள்ளையருக்கு அடிபணிந்து வாழ்வதால் ஒருபோதும் மாற்றம் வந்துவிடாது என்பதையும், அவர்களின் எதேச்சையதிகாரத்துக்கு அடிபணியாது துணிவுடன் எதிர்த்து நின்று போராடுவதன் மூலமும் தான் தென்னாப்பிரிக்க கறுப்பு நிற மக்களுக்கு விடிவுகாலம் பிறக்கும் என்பதையும் அந்நாட்டு மக்கள் உணரச் செய்தார் திரு.மண்டேலா.

    1942ம் ஆண்டுமுதல் அரசியலில்  ஈடுபட்ட அவர் 1948ல் இளைஞர் அமைப்பை ஏற்படுத்தியதன் மூலம் ஆப்ரிக்க தேசிய காங்கிரஸில் தன்னை இணத்துக்கொண்டு அரசியலில் தீவீரமாக செயல்பட ஆரம்பித்தார்.
         கி.பி.1948ல் தென்னாபிரிக்காவில் ஆட்சியில் இருந்த வெள்ளை இனவாத அரசாங்கம் கறுப்பு நிற மக்களுக்கெதிராக முன்பிருந்த அரசாங்கங்களை விட அதிக அளவுக்கு அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டது.  
         இனவாதஅரசாங்கத்தின் நிறவெறியும் ஒடுக்குமுறையும் எல்லைமீறிச் செல்வதை கண்டு சீற்றம் கொண்ட மண்டேலா முழுநேர அரசியலில் ஈடுபட்டு அதன் விளைவாய் கறுப்பு நிற மக்களின் நலனை பாதுகாப்பதற்காக உருவானஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார்.
     அதுநாள் வரையில் மிதவாத நடவடிக்கைகளை மட்டுமே மேற்கொண்டுவந்த ஆப்பிரிக்க தேசிய காங்கிரசைத் தான் தலைமையேற்றதும் வெள்ளை நிறவெறி ஆட்சியை எதிர்த்து அறவழி போராட்டங்களை நடத்தும் போராட்ட அமைப்பாக மாற்றினார் நெல்சன் மண்டேலா.

        
அவரது வன்முறையற்ற போராட்டம் வளர்ச்சியடைவதையும் மக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தவதையும் கண்ட வெள்ளைய நிறவெறி அரசாங்கம் 1956ல், அரசுக்கு எதிராகப் புரட்சி செய்த குற்றத்தைக் காரணம் காட்டி திரு.நெல்சன் மண்டேலாவையும் 150 க்கும் மேற்பட்டப் போராட்டக்கார்களையும் கைது செய்தது.

    வழக்கு நடந்துகொண்டிருந்த போது 14-6-1958ல் மண்டேலா வின்னி என்பவரை மணந்தார்.
         அரசுக்கு எதிராகப் புரட்சியினை எதிர்த்த வழக்கினில் ஆறாண்டு காலமாக நடத்திய சட்டரீதியான நடவடிக்கைகள் மற்றும் உலக நாடுகள் தந்த அழுத்தங்களுக்குப் பிறகு 1961ல் திரு. மண்டேலா உள்ளிட்ட அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
      சிறையிலிருந்து விடுதலையான மண்டேலாவின் செயல்பாடனது முன்பைவிட தீவிரமானது. இதன் காரணமாக ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் அதிவேகமாக  வளர்ச்சியடைந்தது.
      தென்னாப்பிரிக்காவில் கறுப்பு நிற மக்களுக்கு தனியான நுழைவுச்சீட்டு வழங்குவதை எதிர்த்து நடத்திய போராட்டத்தில் நிராயுதபாணியான மக்கள் மீது இனவறி அரசு நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அப்பாவி மக்கள் 69 பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்
    இந்தச் சம்பவம் தென்னாபிரிக்காவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி நாடெங்கும் அவசரநிலை பிரகடணப் படுத்தக் காரணமாயிற்று. ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் உள்ளிட்ட இயக்கங்கள் தடை செய்யப்பட்டன.
      நெல்சன் மண்டேலா தலைமறைவாய் இருந்துகொண்டு இனவறி அரசுக்கெதிராக ஆயதம் தாங்கியப் போரட்டத்தை நடத்தத் தொடங்கினார். இவ்வாயுதப் போராட்டத்திற்கு ஆதரவு வேண்டி ஆப்ரிக்கக் கண்டத்திலுள்ள பிற நாடுகள், இங்ங்கிலாந்து உட்பட்ட நாடுகளுக்கு இரகசியப் பயணங்களை மேற்கொண்டார்.
சிறை வாழ்க்கை-
   மொராக்கோ மற்றும் எத்தியோப்பியாவில் ஆயுதப்பயிற்சி பெற்றபின் நாடு திரும்பிய மண்டேலாவை அவருடைய சகாக்களுடன் 1962ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் ஐந்தாம் தேதி காவல்துறை கைது செய்தது.    
    உரிய ஆவணங்கள் இல்லாது வெளிநாடு சென்ற குற்றத்திற்காக 5 ஆண்டு சிறைதண்டனை வழங்கப்பட்டது.
   மேலும், தென்னாப்பிரிக்க அரசுக்கு எதிராக சதி செய்த குற்றச்சாட்டுக்காக அவர் மீதும்  அவருடைய சகாக்கள் ஏழு பேர் மீதும் நடந்த மற்றொரு வழக்கில் 1964ம் ஆண்டு ஜுன் மாதம் 11ந் தேதி  46 வயதான மண்டேலாவுக்கும் அவருடைய சகாக்கள் ஏழு பேருக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
      1968ல் அவரது தாயார் இறந்தபோதும், பின்னர், 1969ல் அவரது மூத்த மகன் இறந்த போதும் அவர்களது இறுதிச்சடங்குகளில் கலந்துகொள்ள மண்டேலாவுக்கு அனுமதி மறுக்கப்பட்டது.
   பல ஆண்டுகள் தனிமைச்சிறையில் அடைத்துக் கொடுமைப் படுத்தப்பட்டார்.
     1988-ஆம் ஆண்டு கடுமையான காச நோய் ஏற்பட, மரணத்தின் எல்லைக்கே சென்றதால் வீட்டுச்சிறைக்கு மாற்றப்பட்டார்.
   மண்டேலாவை
கைது செய்ததால் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸின் போராட்டம் ஒய்ந்துவிடவில்லை.
  அவரை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கை உலகம் முழுவதும் எழுந்தது.
   ஆனால் தென்னாப்பிரிக்க நிறவெறி ஆட்சி, மண்டேலாவை விடுதலை செய்ய மறுத்து வந்தது.
    மண்டேலாவை விடுதலை செய்யும்படி வற்புறுத்தி உலகெங்கும் ஆர்ப்பாட்டங்களும், ஊர்வலங்களும் தொடர்ந்து நடந்து வந்தன.
விடுதலைக்காக கொள்கையை விட்டுக் கொடுக்காதவர்-

      1973 இல் டிரான்ஸ்காய் மாநிலத்தில் மட்டும் மண்டேலா வசிப்பதாக இருந்தால் விடுதலை செய்ய வெள்ளை அரசு முன் வந்தது.
     அதனை நிராகரித்த மண்டேலாதமது கறுப்பர் இன மக்கள் முழு விடுதலை கிடைக்கும் வரை எனக்கு விடுதலை தேவையில்லைஎன முழங்கினார்.

    
மன்னிப்பு கேட்டால் விடுதலை செய்கிறோம்என்று தென்னாப்பிரிக்கா அரசு ஆசை காட்டியது. அதனையும் நிராகரித்து மன்னிப்புக் கேட்க மறுத்தார் மண்டேலா.

விடுதலை-

   தென்னாப்பிரிக்காவில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு புதிய அரசு பதவிக்கு வந்தபின் புதிய அரசு மண்டேலாவை விடுதலை செய்ய முன்வந்தது.
   அவ்வாறே 11.2.1990 ல் ஆப்பிரிக்க தேசிய காங்கிரஸ் மீதான தடையை நீக்கியும், மண்டேலாவை விடுதலை செய்தும் அதிகாரப் பூர்வமாய் உத்தரவிடப்பட்டது. அன்று மாலையே 71 வயதான மண்டேலா விடுதலை செய்யப்பட்டார்.

       
பிரசித்தி பெற்ற இந்நிகழ்வு உலகத் தொலைக்காட்சிகளில் நேரடியாக ஒளிபரப்பப் பட்டது!
   27 ஆண்டுகள் சிறைவாசம்!
        உலக வரலாற்றில் மண்டேலாவைப் போன்று இவ்வளவு நீண்ட காலம் சிறையில் வாடியத் தலைவர்கள் எவரும் இல்லை.
விருதுகள்-
    மண்டேலாவிற்கு உலக அமைதிக்கான நோபல் பரிசும், இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னாவிருதும்நேரு சமாதான விருதும்மகாத்மா காந்தி சர்வதேச விருதும் வழங்கப்பட்டது.
          மண்டேலாவின் பிறந்த நாளான ஜூலை 18ம் தேதியை சர்வதேச நெல்சன் மண்டேலா நாளாக .நா அறிவித்துள்ளது.
பெருமைக்குரியவர்-
     ஒரு பழங்குடி இனத் தலைவருக்கு மகனாகப் பிறந்த நெல்சன் மண்டேலா, இனவெறி ஆட்சியில் ஊறிக்கிடந்த தென்னாப்ரிக்காவை மக்களாட்சியின் ஒளிமயமான பாதைக்குக் கொண்டு சென்ற மகத்தான தலைவர் ஆவார்.
    தென்னாப்ரிக்கா, ஆப்ரிக்காக் கண்டம் மட்டுமல்லாமல் உலக அளவில் அனைவராலும் விரும்பப்படும் ஒரு நபராக விளங்கியவர்  திரு. நெல்சன் மண்டேலா.

வாழ்வும், மறைவும், புகழும்-
     தன் மக்களை ஒளிமயமான பாதைக்குக் கொண்டு சென்ற
அவரது வாழ்க்கையில் இருண்ட நாளானது இன்றய நாள், 6-12-2013 இன்றய நாளில், இந்திய நேரப்படி (தென்னாப்பிரிக்க நேரப்படி டிசம்பர் 5ம் தேதி வியாழக்கிழமை இரவு 8.50க்கு ) காலை 7 மணிநளவில் உடல் நலக் குறைவு காரணமாக ஜோகன்னஸ்பர்க்கில் தமது இல்லத்தில் காலமானார் 95 வயதான திரு. நெல்சன் மண்டேலா.
   ஜனநாயகம், சமத்துவம், கற்றல் ஆகியவற்றிலிருந்து தனது வாழ்நாள் முழுமைக்கும் அவர் விலகியதே இல்லை.

    இன வெறியாளர்களால் மோசமானத் தூண்டுதல்கள் ஏற்படுத்தப் பட்டபோதும், மண்டேலா, இனவெறிக்கு பதிலாய் இனவெறியை முந்நிறுத்தியதே இல்லை.

   உலகில் அடக்குமுறையை எதிர்க்கும், உரிமைகள் மறுக்கப்படும், ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய மக்கள் யாவருக்கும்     அவரது வாழ்க்கை ஒரு உத்வேகமாய் இருந்து வருகிறது என்பதை எவரும் மறுக்கமுடியாது.
   சமகாலத்தில் வாழ்ந்து மறைந்த ‘மா மனிதன்’ மண்டேலா !
   வானளாவி நிற்கட்டும் அவரின் புகழ் !

Sunday 24 November 2013

ஆச்சர்யமூட்டும் வழக்குகள்! ( பலகீனமான இதயமுள்ளவர்கள் படிக்கவேண்டாம் ) 1.வினோதமான ஆருஷி தல்வார் கொலை வழக்கு.

                                ஆச்சர்யமூட்டும் வழக்குகள்!
                                                                                   ~~~~~~~~~~~~~~~
               ( பலகீனமான இதயமுள்ளவர்கள் படிக்கவேண்டாம் )


1.வினோதமான ஆருஷி தல்வார் கொலை வழக்கு.

   
அந்த அறையின் கதவு சற்றே விசித்திரமானது. அதை வெளிப்புரத்திலிருந்து பூட்டிவிட்டால் உள்ளிருந்து வெளியே வர சாவி தேவையில்லை. வெளியிலிருந்து உள்ளே செல்ல மட்டுமே சாவி  தேவை. வசதிமிக்கவர்கள் வசிக்கும் அபார்ட்மென்ட் அது. காவல் துறையினர் அந்த அறைக்குள் நுழைந்தபோது கட்டிலில், சுருக்கங்களே இல்லாது விரிக்கப்பட்ட நிலையிலிருந்த படுக்கையில், இளம்பெண்ணின் உடல் இருந்தது. படுக்கையில், தலையணையில் இரத்தக் கரையோ, அதன் சுவடோ இல்லை.

   
காலையில் பார்த்தபோது, தன் மகள், அவளது அறையில் கொலை செய்யப்பட்டு இறந்து கிடக்கின்றாள் எனத் தகவல் சொன்ன அவளின் தந்தையும் தாயும் காவல் துறை அதிகாரிகளுக்கு இன்னது இன்னதென சொல்லிக்கொண்டிருந்தார்கள்.

    கடைசீயாய் முந்தைய இரவு சுமார் 11.30 மணிவரையில் தன் மகளை அவளது அறையில் பார்த்ததாயும் அதற்குப் பிறகு அவளது அறைக்கதவைப் பூட்டி சாவியை தன்னுடைய அறையில் படுக்கையின் தலைமாட்டில் வைத்தது ஞாபகமிருப்பதாய் அவளின் அப்பா சொல்லிக்கொண்டிருந்தார்.

    
அப்பெண்ணின் படுக்கைக்குப் பின்னால் (தலைமாட்டில் )இருந்த அவளது பொம்மைகள் சீராய் அடுக்கிவைக்கப்பட்டிருந்தன. ( கவனிக்க - கலையாமல்! )

 
வீட்டில் வேறு ஏதுவும் காணாமல் போயிருக்கவில்லை. ரொக்கமும் விலையுயர்ந்த ஆபரணங்களும் அப்படியே இருந்தன. அவ்வீட்டிற்குள் வரக்கூடிய வசல் கதவுகள் எதுவும் உடைக்கப்படவில்லை. அவ்வீட்டு வேலையாட்களில் ராஜ் என்ற ஒருவனைத் தவிர மற்ற அனைவரும் அங்கு கூடியிருந்தனர்.

  
அக்கம்பக்கம் இருந்தவர்களும் கூடிநிற்க, காவல் அதிகாரிகளின் புலன் விசாரணையும் நடந்துகொண்டிருக்க சிறிது சிறிதாயிருந்த அந்தக் கொலை பற்றிய முடிச்சுகள் பெரிதாகிக்கொண்டிருந்தது.

   
“அநியாயமாய் இப்படி தம் மகளை எந்தப் பாவியோ அக்கிரமமாய் செய்துள்ளதை” கூறிப் பெற்றோர் அரற்றிகொண்டிருந்தனர். நண்பர்களும் அண்டை அயல் வீட்டாரும் அவர்களை சமாதானப்படுத்திக்கொண்டிருந்தனர். இனம்புரியா அசாதாரணம் அங்கிருந்த காவலர் உள்ளிட்ட அனைவரையும் கவ்விக்கொண்டிருந்தது.

    
குறிப்பிட்ட அந்த இரவில், அந்த அபார்ட்மென்ட்டிலிருந்து வெளியில் போனவர் அல்லது வெளியிலிருந்து அந்த அபார்ட்மென்டுக்குள்ளே வந்தவர் எவரும் இல்லை என்பது விசாரணையில் தெரிய வந்ததது.

    
சம்பவம் நடந்த வீட்டில், கொலை நடந்த இரவில், அப்பெண்ணின் பெற்றோரும் அவளும் அவர்களது வேலைக்காரன் ராஜ் மட்டுமே இருந்ததை அருகில் வசிப்பவர்கள் பார்த்ததாய் உறுதிப்படுத்தினார்கள். அதுவே அவர்கள் அவளைக் கடைசியாய்
உயிரோடு பார்த்தது என்றும் கூறினார்கள்.

    
மொட்டைமாடிக்குச் செல்லும் படிக்கட்டின் மேல்படிகளில் ரத்தக்கரைகள் இருப்பதையும்    மொட்டைமாடி கதவிலும், கதவின் பூட்டிலும் ரத்தக்கரைகள் இருப்பதையும் தற்போது தான் பார்த்ததாய் பக்கத்துவீட்டுக்காரர் ஒருவர் வந்து அப்பெண்ணின் அப்பாவிடம் சொல்ல அவர் அதைப்பார்க்க எத்தனித்து படிக்கட்டில் ஒரு சில படிகள் ஏறிவிட்டு, பிறகு, ஏதொ யோசனையாய் நின்று “சாவி வேலைக்காரன் ராஜ்கிட்ட  இருக்குது” என்று  முணுகிக்கொண்டே கீழே இறங்கி வந்து உட்கார்ந்து சுவற்றில் சாய்ந்துகொண்டார்.

  
காவல்துறை அதிகாரிகள் படிக்கட்டில் ஏறிப்போய்பார்த்து மொட்டை மாடிக்குச்செல்லும் வாசல்கதவு பூட்டப்பட்டிருப்பதைப் பார்த்ததும் இறங்கி வந்து ‘ரத்தக்கரை’ செய்தி சொன்னவரை விசாரித்தனர்.

    
எப்போதும் பூட்டப்படாது திறந்தேகிடக்கும் அந்தக் கதவு அன்றைக்குதான் பூட்டுபோட்டுப் பூட்டியிருப்பதாய் அவர் சொன்னார், விசாரித்ததில் வேறு சிலரும் ‘ஆமாம் சதா அது திறந்தேதான் கிடக்கும்’ என்றார்கள். ‘இன்றைக்குதான் அதிசயமாய் பூட்டியிருக்கு’ என்றும் சொன்னார்கள்.

    
இறந்தபெண்ணின் உடலும் சிலபொருட்களும் பரிசோதனைக்காக எடுத்துச் செல்லப்பட்டது. விசாரணைக்காக ஒரு சிலர் அழைத்துச் செல்லப்படனர்.

    
மறுநாள், காவல்துறையினர், மொட்டை மாடிக்கதவை உடைத்து சோதனை செய்தபோது  அங்கொரு ஆணின் உடல் மூடிமறைத்து வைக்கப்பட்டிருந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தது.

     கொலை செய்யப்பட்ட பெண்ணின் அப்பா இறந்து கிடந்த அந்நபர் யார் என அடையாளம் காட்டவில்லை.

    
அது, வேலையாள் ராஜின் உடல்தான் என்று அவனது உறவினர் ஒருவர் அடையாளம் காட்டினர்.

    
அப்பெண்ணின் அம்மாவும் அவ்வுடலில் உள்ள ஆடையை வைத்து அது வேலையாள் ராஜ்தான் என அடயாளம்  காட்டினார்.

   
கொலை வேறெங்கோ நடந்து உடல் இங்கு கொண்டுவரப்பட்டாதற்கான, உடலை இழுத்துவந்த, அடையாளம் தரையில் காணப்பட்டது. ரத்தக்கரை படிந்த போர்வை ஒன்று மடித்து க்ரில் மேல் வைக்கப்படிருந்தது.

  
இரண்டு கொலைகளையும் நேரடியாய் பார்த்த சாட்சிகள் ஏதுமில்லை. கொலைக்கு பயன்படுத்தப்பட்ட ஆயுதம் ஏதும் கிடைக்கவில்லை.

     
வழக்கின் புலன் விசாரணை உள்ளூர் காவல்துறையிடமிருந்து சிறப்பு பிரிவுக்கு மாறியது.

   
பிரேதப்பரிசோதனை அறிக்கை, கொலையான வேலையாள் மற்றும் அப்பெண் ஆகிய இருவரது  தலையிலும் வளுவான பொருளால் தாக்கப்பட்ட காயங்களும், இருவரது  கழுத்திலும் நீளவாட்டில் தொழில் சாதுர்யம் தெரிந்த ஒருவரால் (சர்ஜிக்கலி ட்ரெயின்டு பெர்சொனால்) ஏற்படுத்தப்பட்ட வெட்டுக்காயமும் இருந்ததையும் அக்காயங்களால் மரணம் ஏற்பட்டுள்ளதையும் குறிப்பிட்டிருந்தது.
 
    
சந்தேகத்தின் பேரில் அப்பெண்ணின் பெற்றோர் கைது செய்யப்பட்டனர்.

    பின்னர் ஜாமினில் வெளிவந்த அவர்கள் தங்கள் மகளின் கொலைக்கு காரணமானவர்களைக் கண்டுபிடிக்கவேண்டுமென்று பலவககளில் நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.

   
பிரேதப்பரிசோதனை செய்த டாக்டரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் அவர், பிரேதத்தில், இறந்துபோன அப்பெண்ணின் பெண்ணுறுப்பு அவள் இறந்த பின்னர் சுத்தம் செய்யப்பட்டிருப்பற்கான அறிகுறிகளைச் சொன்னார்.

  
மேலும், “கற்பழிப்பு” என்று பிரேதப்பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடவேண்டாம் என அப்பெண்ணின் சித்தப்பாவின் தூண்டுதலின்பேரில் மற்றொரு மருத்துவர் தனக்கு சிபாரிசு செய்ததையும் குறிப்பிட்டார்.

 
  மேலும், கொலையான பெண்ணினது பெண்ணுறுப்பின் மெல்பகுதியில் மட்டும் white discharge காணப்பட்டதையும், உறுப்பு இயல்புக்கு மாறாக அகண்டிருந்ததையும் குறிப்பிட்டார்.

  
  சிறப்புப் பிரிவினர், தங்களின் முயற்சிகளுக்குப் பின்னரும்...

1.வேலையாளின் இரத்தம் அப்பெண்ணின் படுக்கை விரிப்பிலோ, தலையணையிலோ இல்லை.அவளின் அறையில் அவனது கொலை நடந்ததென நிருபிக்க ஆதாரம் ஏதும் இல்லை.

2.மாடிப்படிக்கடில் பிணத்தை இழுத்துச் சென்ற அடையாளங்கள் மொட்டைமாடி அல்லாமல் வேறு இடத்தில் அவனது கொலை நடந்ததைக் காட்டுகின்றது.

3.அப்பெண்ணின பெற்றோரது உடையில் அவளது ரத்தகரை மட்டுமே காணப்படுகிறது, தவிர, வேலையாளின் ரத்தம் ஏதும் இல்லை.

4. கொலைக்குப் பயன்படுத்திய ஆயுதங்கள் ஏதும் குற்றம் நடந்தபின் உடனடியாய் கண்டுபிடிக்கப்படவில்லை. கொலைக்குப் (கழுத்தில்வெட்ட) பயன்படுத்தப்பட்ட கூர்மையான கண்டுபிடிக்கப்படவே இல்லை. கைப்பற்றப்பட்ட கால்ப் ஸ்டிக்கில் இறந்துபோனவர்களின் இரத்தம் அல்லது டி.என்.ஏ காணப்படவில்லை.

 
[ இந்த  கால்ப் ஸ்டிக் சம்பவம் நடந்து ஓராண்டு கழித்துக் கண்டெடுக்கப்பட்டது ]

5.கைப்பற்றப்பெற்ற, கொலைசெய்யப்பட்ட இருவரின் இரத்தக்கரைகள் தோய்ந்த ஸ்காட்ச் பாட்டிலில் காணப்பட்ட கைவிரல் ரேகைகளை விளக்கும் ஆதாரமில்லை, அவை யாருடையவை என்பதை அடையாளம் காணமுடியவில்லை.

6.சம்பவம் நடந்த அபார்ட்மென்ட் காவலாளிகள் வந்துபோனவர்கள் பற்றிய பதிவுகள் எதையும் செய்திருக்கவில்லை.

7. பெற்றோர்தான் குற்றதில் ஈடுபட்டவர்கள் என நிருபணம் செய்ய ஆதாரங்கள் ஏதும் கிடைக்கவில்லை.

8. கொலைக்குபின்னர் வேலையாளின் செல் போன் இன்னோரு மாநிலத்தில் இருந்ததன் காரணத்தை விளக்கும் சாட்சியம் கிடைக்கவில்லை.

9.  கொலையானது ஒரு அபார்ட்மென்டினுள் நடந்தது என்பதால் நேரில் பார்த்த சாட்கள் எவரும் இல்லை.

10. கொலைக்குப்பின் அந்த வீட்டடின் தரை, படிக்கட்டுகள் ஆகியவற்றில் இருந்த ரத்தகரைகளை சுத்தப்படுத்த உபயோகித்த ரத்தம் தோய்ந்த துணி கண்டுபிடிக்கப்பட்டவில்லை, வேலையாளின் பிணத்தை மாடிக்குக் கொண்டு செல்லப் பயன்படுத்திய படுக்கை விரிப்பு கண்டுபிடிக்கப்பட்டவில்லை.

   எனும் காரணங்களையும் வேறு சில காரணங்களையும் காட்டி வழக்கை முடித்துக்கொள்ள குற்றவியல் நீதிபதிக்கு (சிறப்பு பிரிவினர்) அறிக்கை அனுப்பினர்.

    இதன்பின்னர், சட்டத்தின்படியாக குற்றவியல் நீதிபதிகு இருந்த வாய்ப்புகள் மூன்று. அவை,
     1. இவ்வறிக்கையை ஏற்று குற்றவியல் நீதிபதி வழக்கை கைவிடலாம் ( ஆனால் அந்நீதிபதி அவ்வறிக்கையை ஏற்க மறுத்தார்)

  2. ஆயினும் போதுமான சாட்சியங்கள் இருப்பதாய் நீதிபதி கருதும்பட்சத்தில் அவ்வறிக்கையை ஏற்காது குற்றவாளிகளுக்கு சம்மன் அனுப்ப உத்தரவிடலாம் (அந்நீதிபதி இதைத்தான் செய்தார்).

   3. காவல்துறையினருக்கு மீண்டும் விசாரணை செய்ய உத்தரவிடலாம்.

  (நீதிபதி இந்த மூன்றாவதான வகையைப் பயன்படுத்த) சிறப்புப் பிரிவின் அறிக்கையை ஏற்று வழக்கை முடிக்கக் கூடாது, தம் மகளைக் கொன்ற உண்மைக்குற்றவாளியைக் கண்டறிய மீண்டும் விசாரிக்க உத்தரவிடவேண்டும் என பெண்ணின் பெற்றோர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆட்சேபணை மனு தாக்கல் செய்தனர்.

   
சிறப்பு புலனாய்வாளரது அறிக்கையைப் பெற்ற குற்றவியல் நீதிபதி, அதனை ஏற்க மறுத்ததுடன் பெற்றோரின் மனுவையும் தள்ளுபடிசெய்து உத்தரவிட்டதோடில்லாமல் 13 க்கும் மேற்பட்ட நிகழ்ச்சிகளை/ செய்கைகளை/ ஆதாரங்களைச் சுட்டிக்காட்டி, கொலைசெய்யப்பட்ட அப்பெண்ணின் பெற்றோருக்கு குற்றவாளிகளுக்கான சம்மன் அனுப்ப உத்தரவிட்டார். அவற்றுள் சில….

##…
விசாரணையில்   சொன்னபடி, சம்பவம் நடந்த இரவு அவ் வீட்டில் இறந்துபோன பெண், அவளது பெற்றோர், வேலைக்காரன் ராஜ் ஆகிய நால்வர் இருந்துள்ளதை அக்கம்பக்கத்து வீட்டார் பார்த்திருக்கின்றனர்.

 ##…அதில் இருவர் கொலையாகி இறந்தபின்புயார்  கொலைக்கு காரணமாய் இருப்பார்கள்’ என்ற கேள்விக்கு நால்வரில்  உயிரோடு இருக்கும் அவ்விருவரையும்தான் சந்தேகத்தின் கை சுட்டிக்காட்டுகின்றது.

##…..அவளுடைய அறைக்கோ வீட்டிற்கோ பலவந்தமாய் வெளியிலிருந்து அவ்வீட்டிற்குள் எவரும் சென்றதக தடயங்கள் ஏதும் இல்லாதபோது உள்ளே இருந்தவர்கள்தான் குற்றத்தில் ஈடுபட்டிருக்கவேண்டும்…  கதவுகள் உடைக்கப்படாதிருப்பதால்..

     தங்களுக்கு குற்றவாளிக்கான சம்மன் அனுப்பியதை எதிர்த்தும் அதை ரத்துசெய்யக்கோரியும் உச்சநீதிமன்றத்தில் மேல்முறியீடு செய்தனர் பெற்றோர்.
   
    குற்றவியல் நீதிபதி அப்பெண்ணின் பெற்றோருக்கு குற்றவாளிகளுக்கான சம்மன் அனுப்ப உத்தரவிட்டது சரியே அதை ரத்துசெய்ய முடியாது என 7-6-2012 ஆம் தேதியில் மேல் முறையீட்டைத் தள்ளூபடி செய்து உத்தரவிட்டது உச்சநீதிமன்றம்.

     
இறந்த பெண்ணின் பெயர் ஆருஷி தல்வார்.

    
அவளின் பெற்றோரும், சித்தப்பாவும் டாக்டர்கள்.

    
கொலை 2008 ஆம் ஆண்டு மே மாத 15 -16 தேதிகளுக்கு இடைப்பட்ட இரவில் உத்திரப்பிரதேச நொய்டாவில் நடந்தது.

    
சிறப்புப் புலனாய்வு பிரிவு – சி.பி.ஐ.

                                                                   **********