Thursday, 7 February 2013

தமிழும் தமிழரும்- 3.


தமிழும் தமிழரும்- 3.
  பல்வேறு மொழிகளிலிருந்தும் ஏராளமான சொற்களைக் கடன்கொண்டிருப்பதால், ஆங்கில மொழி எக்கருத்தையும் தெரிவிக்கவல்ல மொழியாகக் கருதபடுகின்றது, புகழப்படுகின்றது.

        ஆனால், இந்த நூற்றாண்டிலும், ஆங்கிலத்தில் அல்லது அதைப் போன்ற பிற பெருமொழிகளிலும் இல்லாத பல சொற்கள் கி.மு. 3000 ஆண்டுகட்கு முற்பட்ட தமிழ் மொழியில் இருந்தது மிகமிக வியக்கத்தக்கதுதானே!

    கன்னடத்தில்
இலக்கியம் தோன்றியது கி.பி. 8ஆம் நூற்றாண்டென்றும், தெலுங்கில் தோன்றியது கி.பி. 10ஆம் நூற்றாண்டென்றும், மலையாளத்தில் தோன்றியது கி.பி. 13ஆம் நூற்றாண்டென்றும் சொல்லப்படுகின்றது.    

   ஆனால்,
தமிழிலக்கியம் தோன்றிய காலம் இன்ன நூற்றாண்டென்று வரையறுத்துக் கூற இயலாதவாறு, அத்துணைப் பழைமையாயிருத்தலால், திராவிட மொழிகளில் தமிழே,  அது மொழியாயினும் நூலாயினும், - மிகத் தொன்மை வாய்ந்தது என்பதைச் சொல்ல வேண்டுவதேயில்லை!

தமிழின் திருத்தம்
  திராவிட மொழிகளுள் தமிழ்மொழி மிகத் திருந்தியதென்பது, அதன் சொல் வடிவங்களாலும் இலக்கணச் சிறப்பாலும் அறியப்படும்.

தமிழ்ச்சொல்
வளம்
  தமிழின் சொல்வளத்தைத் தமிழரே இன்னும் சரியாய் உணராதிருப்பது வேதனையே!.
      ‘இலை’ என்னும் ஒரேயொரு உறுப்பிற்கு நான்கு வெவ்வேறு சொற்கள் உள்ளன.
 
   
மா, வாழை முதலியவற்றினது இலை யென்றும், நெல் கேழ்வரகு முதலியவற்றினது தாள் என்றும், கரும்பு, பெருஞ் சோளம் முதலியவற்றினது தோகையென்றும், தென்னை பனை முதலியவற்றினது ஓலையென்றுங் கூறப்படும்.
 
     பூ
என்னும் பொதுப்பெயரை மட்டுமே அனைவரும் அறிவர். ஆயினும் செடி, கொடி, மரம் இவற்றில் தோன்றும் பூ , அது முதலாவதாய் தோன்றும்போது  அரும்பு’ என்றும், பின்னர் அது பேரரும்பானபோது போது’ என்றும், அதுவே மலர்ந்தபின்மலர்’ என்றும், பின்னர் விழுந்தபின்வீஎன்றும், வாடியபின் செம்மல் என்றும் கூறப்படும்.

  
  அரும்பு
என்னும் ஒரு நிலைக்கே, அதனதன் அளவுக்குத் தக்கபடி, அரும்பு, மொட்டு, முகிழ், முகை, மொக்குள் என வெவ்வேறு சொற்களும்
உள்ளன.

  
பூக்கள்
கோட்டுப்பூ, கொடிப்பூ, நீர்ப்பூ, நிலப்பூ என நால்வகையாக வகுக்கப்படும். இவற்றுடன், செடிப்பூ என்பதொன்றையும் சேர்த்துக்கொள்ளலாம்.

   
  காயின்
வெவ்வேறு நிலைகள் பூம்பிஞ்சு, திருகுபிஞ்சு, இளம்பிஞ்சு, பிஞ்சு, அரைக்காய், காய், முக்காற்காய், கன்னற் காய் அல்லது பழக்காய், கடுக்காய் அல்லது கருக்காய் என வெவ்வேறு சொற்களாற் குறிக்கப்படுகின்றன.
     மாம்பிஞ்சு வடு என்றும், பலாப்பிஞ்சு மூசு என்றும் விதப்பித்துக் கூறப்படுகின்றன.

    
  பருவத்திற்
காய்ப்பது பருவக்காய் என்றும், பருவ மல்லாத காலத்திற்
காய்ப்பது வம்பக்காய் என்றும் கூறப் படுகின்றன.

    
முதிர்ந்தபின்
கனிவில்லாதது காய் என்றும், கடினமானது நெற்று என்றும் கூறப்படுகின்றன.
 
    
செவ்வையாய்ப்
பழுக்காத பழங்கள், வெவ்வேறு காரணம் பற்றிச் சிவியல், சூம்பல், வெம்பல், சொத்தை எனப் பலவகையாகக் கூறப்படுகின்றன. இவற்றுள், சொத்தைவகை சொண்டு, சொத்தை, சொட்டை எனப் பல பெயராற் கூறப் படுகின்றது. சொத்தையான மிளகுப் பழம் அல்லது வற்றல் சொண்டு என்னுஞ் சொல்லால் மட்டும் குறிக்கப்படுதல் காண்க.
 
     
பழத்தின்
தோல்வகைகளுக்கு, அதனதன் வன்மை மென்மைக்குத் தக்கபடி தொலி, தோல், தோடு, ஓடு, சிரட்டை எனப் பல பெயர்கள் உள்ளன.
        விதை வகைக்கு வித்து, விதை, மணி, முத்து, கொட்டை என வெவ்வேறு சொற்கள் உள்ளன.

             இங்ஙனம்,தமிழில் ஒவ்வோர் உறுப்பிற்கும் பற்பல சொற்கள் உள்ளன!

       இனியாவது தமிழ் மொழியின் வளம் அறிந்து போற்றுவோம்!

       இதே நாளில் (7-2-1902) ல் பிறந்து மொழிஞாயிறாய் திகழ்ந்த தேவநேயப்பாவாணர் அவர்களின் நினைவேந்தி அவரது ஆய்வைப் பகிர்ந்தேன்! ஓங்கட்டும் அவர் புகழ்!

2 comments:

  1. தமிழை சிறப்பிக்கும் அனைத்து பதிவிற்கும் வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. மிக்க நன்றி திரு. திண்டுக்கல் தனபாலன்.

      Delete