“பொன்னியின் செல்வன்”உண்மை வரலாறா ? கதையா?
படிக்கும் ஆர்வமுள்ளவர்கள், எழுத்துலக ஜாம்பவான், திரு.கல்கியின் ‘பொன்னியின்
செல்வன்’ கதையைப் படிக்காமலும் அதன்சுவையை
சுவைக்காமலும் இருக்கமுடியுமா என்பது ஐயமே! நான்
படித்திருக்கின்றேன்!ஆயினும் ஒன்றை சொல்லியாகவேண்டும். வரலாறு என்பது வேறு, கதை என்பது வேறு.
திரு. கல்கி அவர்கள் எழுதியது சோழர் குலம் பற்றிய உண்மை வரலாறு என்றே பலரும் எண்ணுகின்றார்கள். அவ்வாறு எண்ணுவது மிகவும் தவறு.
“பொன்னியின் செல்வன்” என்பது, வரலாற்றில் நடந்த ஒரு,மிகச் சில நிகழ்வுகளைக் கொண்டு திரு. கல்கி அவர்கள் தனது கற்பனையால் புணைந்து எழுதிய மிகப் பிரம்மாண்டமான கதை.
ஆனால், அதுவே சோழர் வரலாறு அல்ல.
உதாரணத்திற்குச் சில:-
1) கதையின் பெயரில் உள்ளது போல இராசராச சோழனுக்கு “பொன்னியின் செல்வன்” என்ற மெய் கீர்த்தியே ( பட்டப் பெயர் ) கிடையாது.
அது திரு.கல்கி அவர்களின் கற்பனையால் கிடைத்து, உலகமெலாம் பரவிய பெயர் என்பதே சரியாகும்.
2) வல்லவராயன் வந்தியத்தேவன் ஒரு வாணர்குல இளவல் என்பது திரு.கல்கி அவர்களின் கற்பனை.
வரலாற்றில், அக்காலகட்டத்தில் வாணர்குலம் சோழருக்கு எதிரான குலமாயிருந்தது.
வரலாற்றில், குந்தவையை மணந்த வல்லவராயன் சாளுக்கிய அரசகுலத்தைச் சேர்ந்த ஒருவன்.
3) ஈழத்திற்கு, அதாவது இலங்கைக்கு, இராசராசனின் தகப்பன் சுந்தர சோழனும், இராசராச சோழனும் போர் நிமித்தம் சென்றார்கள் என்பது திரு.கல்கி அவர்களின் கற்பனை.
ஆனால் உண்மையில், வரலாற்றில், சுந்தர சோழனோ அவன் மகன் முதலாம் இராசராச சோழனோ இலங்கைக்குச் செல்லவேயில்லை.
முதலாம் இராசராசன் காலம் வரையில், இலங்கையின் மீது படையெடுத்துச் சென்ற முதல் சோழ அரசகுமாரன், இராசராச சோழனின் மகனும், சோழர் படைக்குத் தலைமையெற்றுச் சென்ற, அப்போது, இளவரசனாயிருந்த முதலாம் இராசேந்திரன் சோழனே ஆவான்.
4) மேலும், முதலாம் இராசராச சோழனின் சிறிய தகப்பனாகிய “உத்தமசோழன்” என்பவன் சோழர் குலத்தோன்றலே அல்ல, அதாவது முதலாம் கண்டராதித்த சோழனுக்குப் பிறந்தவனே அல்ல என்பது திரு. கல்கி அவர்களின் கற்பனைகளுள் ஒன்று.
முதலாம் கண்டராதித்த சோழனின் புதல்வன் உத்தமசோழன் என்பதே வரலாறு.
சுந்தர சோழனின் இறப்பிற்குப் பின்னர் அவனது மகன் முதலாம் இராசராசனே சோழப்பேரரசுக்கு மன்னனாக வேண்டும் என்று நாடே விரும்பிய போது, அரியாசணத்தில் அமர உரிமையும், விருப்பமும் உள்ள தன் சிறிய தகப்பன் உத்தமசோழனே அடுத்து அரசனாக வேண்டும் என்று இராசராச சோழன் அரசுரிமையை விட்டுக்கொடுத்தான் என்பதும் வரலாறு.
புராணங்கள் பற்றிக் கூறும்போது
“நன்று புராணங்கள் செய்தார் -- அதில்
நல்ல கவிதை பலப்பல தந்தார்.
கவிதை மிகநல்ல தேனும் -- அக்
கதைகள் பொய்யென்று தெளிவுறக் கண்டோம்;
புவிதனில் வாழ்நெறி காட்டி -- நன்மை
போதிக்கும் கட்டுக் கதைகள் அவைதாம்.”
என்பான் பாரதி!
அது போலவே “பொன்னியின் செல்வன்” ஒரு நல்ல கதை மட்டுமே என்பதறிவோம்!
~~~~~~~~~~**********~~~~~~~~~~~
No comments:
Post a Comment