Friday, 22 March 2013

பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் – இந்திய விடுதலைப் போராட்டத் தியாகிகளின் தியாகத்தை என்றும் நினைவில் ஏந்துவோம்.


                          என்றும் நினைவில் ஏந்துவோம்
        
பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் –
இந்திய
                        விடுதலைப்
போராட்டத் தியாகிகளை .
                                               ~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~~            

             அக்டோபர் 30, 1928ல் லாகூரில் சைமன் கமிஷனக்கெதிராக நடத்திய ஊர்வலத்திற்கு தலைமையேற்ற  லாலா லஜ்பத் ராய் மீது நடந்த போலிஸின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலின் காரணமாய் 17,நவம்பரில் 1928ல் அவர் மாண்டார். இதற்கு பழி தீர்க்கும் வண்ணம்  17 டிசம்பர், 1928 இல் லாகூரில் நடத்தப்பட்ட தைரியமான தாக்குதலால் பிரிட்டிஷ் போலீஸ் அதிகாரி ஜே.பி. சாண்டர்ஸ் சுட்டுக்கொல்லப்பட்டார். குற்றவாளிகள் தப்பியோடியதால்  பிடிக்கமுடியவில்லை,

      அடுத்த நாள் காலை லாகூர் நகரின் பல்வேறு இடங்களில் சுவர்களில் சாண்டர்ஸ் கொல்லப்பட்டது பழி தீர்ப்பென்றும் அதனை நியாயப்படுத்தியும் அச்சிடப்பட்ட சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.


      இது நடந்த சம்பவத்தின் மேம்போக்கான நிகழ்வுதான்.

     இதில் ஈடுபட்ட
 ஜெய் கோபால் அரசு  தரப்பில் சாட்சியாக, அப்ரூவராக, மாறி விவரித்தபோதுதான் உண்மை வெளிவுலகுக்கு தெரிந்தது, இவ்வழக்கு ‘லாகூர் சதி வழக்கு’ என்ற பெயர்பெற்றது.

        
லாலா லஜ்பத் ராய் இறந்ததற்கு காரணமான போலீஸ் அதிகாரிகளைக் கொல்வதன் மூலம்பழிவாங்கும் திட்டம்’ உருவாகி, அதற்காக  பகத் சிங், சுகதேவ் மற்றும் ராஜகுரு முயற்சிக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டு அதன்படி நிறைவேற்றப்பட்டது என்பதே அது.

    அக்காலத்தில்
வெள்ளைய அரசின் அடக்குமுறை நடவடிக்கைகளையும், சட்டங்களையும் எதிர்த்து தொழிலாளர்கள்,தீவிரமாகப் போராடினர். அவர்களை ஒடுக்கதொழில் தகராறு சட்ட வரைவை’ ஆங்கிலேய அரசு கொண்டு வந்தது.

   இச்சட்ட வரைவு நிறைவேற்றப்படும் நாளில், டெல்லியில் அப்போதிருந்த,  மத்திய சபை’  (நாட்டின் அப்போதய பாராளுமன்றம்) யில் குண்டு வீசுவது என்று பகத்சிங் திட்டமிட்டு, 1929 ஏப்ரல் 8 ஆம் தேதி தொழில் தகராறு சட்ட வரைவு வாக்கெடுப்பில் நிறைவேறியதை அறிவிக்க ஜென்ரல் சுஸ்டர் என்ற வெள்ளைய அதிகாரி எழுந்தபோது, பார்வையாளர் பகுதியில் அமர்ந்திருந்த பகத்சிங்கும், பி.கே. தத்தும், அவையில், உறுப்பினர்கள் யாருமேயில்லாத இருக்கைகளை நோக்கி குண்டுகளை வீசினர்.

      
செவிடர்களை கேட்கச் செய்வதற்காக நாங்கள் குண்டு வீசுகின்றோம்என்று எழுதப்பட்ட கைப்பிரதிகளையும் வீசினர்.

    நாட்டு மக்களின் கவனத்தை ஈர்க்க நாடாளுமன்றத்தின் எவருமில்லாத வெற்றிடத்த்தில் குண்டு வீசிய பகத்சிங்கும், பதுகேஷ்வர் தத்-தும் கூட்டதினரின் குழப்பத்தை பயன்படுத்தி தப்பியோடியிருக்கலாம். ஆனால், ஓடாது உறுதியாய் நின்று கோழம் எழுப்புவது என்று ஏற்கனவே தீர்மானித்தபடி கோழம் எழுப்பிய நிலையில் கைதாகினர்.

    பாராளுமன்றத்தில்
குண்டுகள் வீசியதற்காகவும், ஜே.பி. சாண்டர்ஸ்  கொலை வழக்கிற்காகவும் அவர்கள் கைது செய்யப்பட்டு, நடந்த விசாரணை முடியும் தருவாய் வந்தது.

    
வழக்கு இறுதி கட்டத்தையடைந்தபோது, செப்டம்பர் 20, 1930 ல் பகத் சிங்கின் தந்தை சர்தார் கிஷன் சிங், தனது மகனொரு அப்பாவி, கொலையாளி இல்லை என்று நிரூபிக்க பல உண்மைகள் இருக்கின்றன என்றும், தனது மகன் நிரபராதி என்றும் நிரூபிக்க ஒரு வாய்ப்பு கொடுக்க வேண்டும் என்று கேட்டு மனு ஒன்றைக் கொடுத்தார்.

    இது பகத் சிங்கிற்குத் தெரியவந்தபோது மிகவும் கோபமாக, தந்தையின் நடவடிக்கையை எதிர்த்து, அக்டோபர் 4, 1930ல் அவருக்கு ஒரு கடிதம் எழுதினார். அதிலுள்ள சில வரிகள்-

‘….என்னை தண்டனையிலிருந்து காக்கும் பொருட்டு  நீங்கள் நீதிமன்றத்தில் ஒரு மனு தாக்கல் செய்தீர்கள் என்று நான் அறிந்தபோது என்னால்  நம்பமுடியவில்லை..... உங்களின் இந்த செயல் என் மனதை வருத்தியுள்ளது.....  இத்தகைய ஒரு மனுவை நீங்கள் சமர்பித்தது எப்படி சரியானது என என்னால்  புரிந்து கொள்ள முடியவில்லை.... என்னைக் கலந்தாலோசிக்காமல், என் சார்பாக இப்படியொரு செயலை மேற்கொள்ள உங்களுக்கு உரிமையிருந்ததாய் நான் நினைக்கவேயிவில்லை....’
‘...... என் வாழ்க்கை, குறைந்த பட்சம் எனக்கு, மிகவும் விலையுயர்ந்தது அல்ல. ஒருவேளை நீங்கள் அப்படி நினைத்திருக்கலாம். எனது கொள்கைகளை இழந்து பெறுமளவுக்கு என் உயிரொன்றும் அவ்வளவு  மதிப்பானது இல்லை....’


 
வழக்கில் நீதிமன்றம் பகத் சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகிய மூவருக்கும் தூக்குதண்டனை விதித்தது.
   
   
 1931 மார்ச் 24 ல் நிரைவேற்றப்பட வேண்டிய தண்டனை கலவரத்தை தடுக்க சிலமணி நேரங்கள் முன்னமேயே மார்ச் 23 ல் நிரைவேற்றப்பட்டது.

 விடுதலைப்
போராட்டத் தியாகிகளின் தியாகத்தை என்றும் நினைவில் ஏந்துவோம்.


2 comments:

  1. அறிந்து கொள்ள வேண்டிய பகிர்வு...

    சரியான நாளில் தான் பதிவு செய்து உள்ளீர்கள்...

    நன்றிகள் பல.... வாழ்த்துக்கள்...

    ReplyDelete
    Replies
    1. நன்றி திரு. திண்டுக்கல் தனபாலன்.

      Delete