Showing posts with label பண்புநலன். Show all posts
Showing posts with label பண்புநலன். Show all posts

Monday, 31 December 2012

இன்னலற்ற வாழ்க்கை வாழ - சாலை பாதுகாப்பு

தேசிய சாலை பாதுகாப்பு வாரம்ஜனவரி 1 முதல் ஜனவரி 7 வரை!


       இந்திய அளவில் ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி1  முதல்7  ஆம் தேதி வரை  தேசிய சாலைப் பாதுகாப்பு வாரம்(  National Road Safety Week, January 1 to 7) கடைபிடிக்கப்படுகிறது.
         நம் மக்களிடையே, விபத்துக்களைக் குறைப்பது,  விபத்து ஏற்படாமல் தவிர்ப்பது பற்றிய விழிப்புணர்வு மற்றும் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து அந்நாட்களில் பிரச்சாரம் மேற்கொள்ளப்படுகிறது.
         சாலை விபத்துக்களால் பலர், வருமானம் ஈட்டும் குடும்பத்தின் உறுப்பினரை, தாய்தந்தையரை, வாழ்க்கைத்துணையை இழக்கின்றார்கள். பலர் பிள்ளைகளை இழந்துவிடுகின்றார்கள். இதனால், குடும்பத்தினர் நிம்மதி இழந்துவாழ நேரிடுகின்றது. மேலும், இவ்விபத்துகள் நாட்டின் வளர்ச்சியையும் பாதிக்கிவே செய்கின்றன.
         இத்தகைய சாலை விபத்துகள் நிகழாமல் தடுக்கவும், மக்களின் சாலைப் பயணங்கள் இனிமையாக அமையவும் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
         இவை மட்டும் போதாது, மக்களாகிய நமது பங்களிப்பும் தேவையான ஒன்றாகின்றது. .
         சாலையில் வேகம் காட்டுவது விவேகம் அல்ல. மேலும், சாலையில் வேடிக்கை பார்த்துக் கொண்டு, கவனத்தை வேறு இடத்தில் வைத்துக் கொண்டு, விதிகளுக்கு முரணாக  வாகனத்தை ஓட்டுவது  நமக்கும் நமது  குடும்பத்தினருக்கும் பல்வகை இழைப்பையே தரும்.
         சாலை விபத்துக்களால் ஒவ்வொரு ஆண்டும் இந்தியாவில் சுமார் ஒரு லட்சம் பேர் பலியாகின்றார்கள். இதில் சுமார் 11 முதல் 12 சதவிகித மரணம் தமிழகத்தில் நடக்கின்றது .   இதில், சென்னையில் மட்டும் சுமார் 500 பேர்  உயிரிழக்கின்றார்கள்.
          சாலை விபத்துகளில் அதிகமாக இளைஞர்கள்தான் பலியாகி வருகிறார்கள் என்ற தகவல் மிகுந்த வேதனையளிக்கும் ஒன்றாகும்.
          இதற்கு முக்கிய காரணம், விளேயாட்டுத்தனமும், பாதுகாப்பற்ற மற்றும் தலைக் கவசம் அணியாத இருசக்கர வாகனப் பயணமுமே.
                              இந்திய அளவில், எண்ணிக்கையில்.  சாலைவிபத்தில் இளைஞர்கள் பலியாவது தமிழகம் இரண்டாவது இடத்தில் இருக்கின்றது என்பது மேலும் வேதனையளிக்கும் ஒன்றாகும்.
          இளைய சமுதாயம்  பாதுகாப்போடு இன்னலற்ற வாழ்க்கை வாழ அவர்களோடு அனைவரும் புத்தாண்டில் உறுதிமொழி ஏற்போம்!

(மேலேயுள்ள படம் எவரையும் புண்படுத்தும் நோக்கமில்லாது எடுத்துக்காட்டாக என்னால் பயன்படுத்தப்பட்டுள்ளது)

வாக்களிப்பது கடமை

வாக்களிப்பது கடமை

      
தேர்தல் காலங்களில் வாக்குகளைச் சேகரிக்கும் விதமாக,         வாக்குகளைக் குறிவைத்துதனிப்பட்ட அரசியல் கட்சிகள், அல்லது அரசியல் கட்சிசார்ந்த நண்பர்கள் தருவன எதையும் நான் என்றுமே ஏற்பதில்லை. வாங்கிக்கொள்ளும்படி என்னை எவரும் கட்டாயப்படுத்தினால்தேர்தலில் வாக்களிக்காது போவேன்என்றே அச்சுறுத்துவேன்.

    
வாக்களிப்பது என்பது மக்களாட்சியில், இந்தியக் குடிமகனாகிய எனது அடிப்படைக் கடமை. என் கடமையை விலைபேசுவது என்னையே விற்கமுற்படுவதாகும் என்றே நான் கருதுகின்றேன், சுயமரியாதை இழந்தபின் வாழ்வேது!

   
குடும்ப உணவுப் பங்கீட்டு அட்டைக்கான, அரிதாய் கிடைக்கும், உணவுப்பொருள்களைத் தவிர்த்த அரசு தரும் பிற இலவசங்களை நான் பெறுவதில்லை, புயல், மழை, வெள்ளம்,வறட்சி போன்ற காலங்களின் அரசு நிவாரணங்கள் (ரொக்கத்தொகை) உட்பட. அவற்றை எதிர்கொள்ளும் சக்தியும் வசதியும் எனக்கிருக்கின்றது என்பதால், இல்லாதோருக்குக் கொடுங்கள் என்று!

      இயல்பான நிலையில், இலவசங்கள் அற்றுப்போக, மக்களிடம் சுயமரியாதை உணர்வு தோன்ற வேண்டும். சுய மரியாதையைப் பேணும்போது மக்கள் நினைப்பது என்றும் கைகூடும்!

                                                      ~~~~~~~~~****~~~~~~~~~~

வெகுளி தரும் வெகுமதி

1.வெகுளி தரும் வெகுமதி
     ~~~~~~~~~********~~~~~~~~~~
        இறந்தகாலம், நிகழ்காலம், வருங்காலம் என எல்லாக் காலங்களிலும் வெகுளித்தனம் வேதனையையே அளிக்கின்றது!

     நகைச்சுவை உணர்வுடன் பதிவுகள் இடும் நண்பர் ஒருவருக்கு திடீரென்று ஒரு இடர்பாடு ஏற்படவே, அதையும் வெகுளியாய் ஃபேஸ்புக்கில் பதிவிட்டார் அவர்.

           விளைவுஅவரது வேதனை இன்னும் அதிகமாயிற்று.

          இடம், பொருள், ஏவல் என்பனவற்றை சற்றும் கருத்தில் கொள்ளாத அவரது நண்பர்கள் பலர், அந்நண்பருக்கு வந்த இடரிலிருந்து நல்லபடியாய் வெளிவரும் ஆலோசனைகளைக் கூற முன்வராது…....கேலியானக் கருத்துக்களைக்கூறி, கேலிச்சொற்களால் குத்திக்கீறி, ரணப்படுத்தியதைப் பார்க்கையில் மனம் வேதனையடைந்தது!

         
நண்பர், சிரிக்கச் சிரிக்க செய்திகள் போடுபவர். அச்சிரிப்பு வெடிகளை ரசித்தே பழக்கமாகிவிட்டதால் ஏற்பட்ட வினை!

         நகைச்சுவையாய் பதிவிடுபவர்களுக்கும் துன்பங்கள் வரும் என்பதை உணர மறுக்கும் சிலர்..இருபாலர் நட்பில் கிண்டலும் கேளியுமாய் இருக்கலாம் என்ற எதிர்பார்ப்புடைய பலர்.. என்று இக்காலச்சூழல்  இருப்பது "இடுக்கண் களைவது"  நட்பின் பண்பு என்பதைப் புரிந்துகொள்ளும் பக்குவம் இன்னமும் பலர் பெறவேயில்லை என்பதையே காட்டுகின்றது. இதைப் பார்க்கும்போதுதான் மனம் இன்னும் அதிக வேதனையடைகின்றது!

         "பக்கத்திருப்பவர் துன்பம்தனைப் பார்க்கப் பொறாதவன் புண்ணிய மூர்த்தி " என்றான் பாரதி அன்று!
         
       
இன்றோ..அத்துன்பத்தை உன்னிப்பாய்ப் பார்த்து, ஆராய்ந்து... பின் படமும் எடுத்துப்போட்டு சிலாகிக்கும் பண்புதான் மண்டிக்கிடகின்றது..

          மரபுகளையும் மாண்புகளையும் இழக்கத் துணிகின்றதோ மானுடம்?