Saturday, 26 January 2013

தமிழும் தமிழரும்-2.

தமிழும் தமிழரும்-2.

    ‘சங்கறுப்பதெங்கள் குலம் சங்கரனார்க்கேது குலம்? சங்கை அரிந்துண்டு வாழ்வோம் - அறவே உம்போல் இரந்துண்டு வாழ்வதில்லை...’ எதோ பரிச்சயமான.....இலக்கிய வரிகளாய்த் தோணுதில்ல...!

 :(

         சரிங்க.. இன்னும் கொஞ்சம் பின்னோக்கி போவோம்! ‘அங்கம் புழுதிபட, அரிவாளில் நெய்பூசி பங்கம் படவிரண்டு கால் பரப்பிசங்கதனைக் கீர்கீர் என அறுக்கும் நக்கீரனோ எம்கவியை ஆராய்ந்து சொல்லத் தக்கவன்?’

ஒ… சிவாஜி பேசுவாரு… திருவிளையாடல்….


  ...ஆமாங்க... ஆமாங்க... திருவிளையாடல் தான்..கண்டுபுடிச்சுட்டீங்க...சரிங்க..இன்னும் கொஞ்சம் பின்னால போவோம்..அதுக்கு முன்னால என்ன நடந்துச்சு..?

….இவரு பாட்டெழுதினாரு…அப்புறம் தருமிகிட்ட கொடுத்தாரு….அங்க அவரு குற்றம்னாரு…..

         ...ஆங்.. அதேதாங்க...சரியா சொல்றீங்க....எங்க சொல்லுங்க அந்த பாட்டை... ஞாபகம் வரலை இல்ல... சரி நானே சொல்றேங்க…

‘கொங்கு தேர் வாழ்க்கை அம் சிறைத் தும்பி
காமம் செப்பாது, கண்டது மொழிமோ
பயி்லியது கெழீஇய நட்பின், மயில் இயல்
செறி எயிற்று, அரிவை கூந்தலின்
நறியவும் உளவோ? நீ அறியும் பூவே?’

….அதேதாங்க….அப்படியே சிவாஜி பேசுறது இன்னமும் காதுல ஒலிச்சுகிட்டேயிருக்கு!

  ம்....நல்ல ஞாபக சக்தி உங்களுக்கு!....சரியா கண்டுபிடிச்சிட்டீங்க...நெறைய தடவை படம் பார்த்திருப்பீங்க போல..இல்லைன்னா...பலபேர் பேசிக் கேட்டிருப்பீங்க போல...

:)...என்னங்க இது..…இதைத் தெரியாதவங்க தமிழ்நாட்ல இருப்பாங்களா என்ன.!

    ...ஆமாங்க ...ஆமாங்க எல்லா ஊர்லையும் தெரிஞ்சுதான் வைச்சுருக்காங்க... ம் ஆனா ...இந்த பாட்டுக்கு என்னங்க பொருள்.... அட, சிவாஜி சொன்னது வேணாங்க நீங்களா சொல்லுங்களேன்….வரலையா..சரி அதேயும் நானே சொல்றேங்க…
      “தேன் தேடும் வாழ்க்கை கொண்ட அழகிய சிறகுகளை உடைய தும்பியே! தேன் உன்னும் காம ஆசையால் சொல்லாமல், உண்மையாக நீ கண்டதைச் சொல். இவள் என்னிடம் பயின்றதைக் கெழுதகை நட்பாகக் கொண்டவள். அவளும், அவள் கூந்தலும் மயிலின் இயல்பைக் கொண்டவை. அவற்றைக் காட்டிலும் நல்ல மணமுள்ள பூக்கள் இருக்கின்றனவா?”

…ஆகா.. நல்லா தமிழ் பேசரீங்க!
          ...ஆமாங்க ...ஆமாங்க.. ஆனா இந்தப் பாட்டை எழுதியது யாருன்னு சொல்லுங்க பார்ப்போம் !

வேற யாராயிருக்கும் அவர்தாங்க ..

           … யாருங்க…சிவாஜி யா?

…இல்லைங்க..நக்கீரரா வருவாறே அவர்தாங்க....
         அதுதான் இல்லைங்க. பாடலை இயற்றியவர், ‘இறையனார்’ என்கிற புலவர், பாடல் இடம்பெற்றது -குறுந்தொகை (பாடல்.2)!

பார்த்திங்களா தமிழராய் இருந்தும்… தமிழை மறந்துட்டோம் பாருங்க !!



**********************

Monday, 14 January 2013

தமிழும் தமிழரும்-1


                             தமிழும் தமிழரும்-1

 
    தமிழரின்
சிறந்த தன்மைகள் மறம், அடுத்தாரைக் காத்தல், ஈகை, விருந்தோம்பல், நடுவுநிலை, நன்றியறிவு, மானம், உண்மையுரைத்தல், நுண்ணறிவு முதலியனவாகும்.
       
      நம்மில் எவரேனும் இவற்றில் ஒருசிலவற்றிலிருந்து காலச்சூழலால் சற்றே விலகியிருந்தாலும் நம் வருங்காலத் தலைமுறையினரது நலன் கருதி மீண்டும் அச்சிறப்பு நிலைக்குத் திரும்பவேண்டியதென்பது இன்றியமையாதது.

 
  அதில் ஒன்றாய் அமைந்ததுவே தமிழரது ஆண்டின் தொடக்கம் குறித்தது.

     
  தங்களின் தொன்மையான ரோம் நகர
ம் தோன்றிய நாளின் காலத்தை அடிப்படையாகக் கொண்டு ரோமானியர் ஆரம்பித்த நாட்காட்டியானது, உலகளாவி, இன்றய பொதுநாட்காட்டியாய் பரிணமித்துள்ளது.

     ஆனால், அவரோடு பண்டைக்காலம் தொட்டே தொடர்புடைய தமிழர் மட்டும் பல்லாயிரம் ஆண்டுகளுக்குப் பின்னரும், முழுதும் தம் பெருமைபேசும் ஒரு நாட்காட்டியினை ஏற்படுத்திக்கொள்ள இயலவில்லை என்பது வருத்தம்தரும் ஒன்றாகவே உள்ளது.

   தமிழில்
தொடர்ச்சியாக ஆண்டுகளைக் குறிக்கசக’ ஆண்டு பயன்படுத்தப்பட்டாலும் அது தமிழரல்லாத சகர்களின் ஆட்சியை ஆதாரமாகக் கொண்டதாகும்,

        தற்போது(ம்) உள்ளபிரபவ முதல் அட்சயவரையுள்ள 60 ஆண்டுகளில் ஒன்று கூட தமிழ் இல்லை. மேலும், அவையாவும் 60 ஆண்டுகளுக்கு மேல் உள்ள காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாகவும் இல்லை.

      அவைகளுக்கு வழங்கும் கதைகள் யாவும் அறிவு, அறிவியல், தமிழ் மரபு, மாண்பு, பண்பு ஆகியவற்றுக்குப் பொருத்தமாகவும் இல்லை, அவற்றின் துணைகொண்டு பல்லாயிரமாண்டுகளாக வாழ்ந்து வரும் தமிழினத்தின் காலத்தை வரையறுக்கவும் முடியவில்லை.

  
இந்நிலையைப்
போக்கவும், தமிழர்களுக்கென தனியாக தொடர்ச்சியாக கூடும்படியான ஓரு ஆண்டு முறை வேண்டும் என்ற தேவையை உணர்ந்த, நம் முன்னோரான, திரு. மறைமலை அடிகள், தமிழ்த்தென்றல் திரு.வி.கலியாணசுந்தரம், தமிழ்க் காவலர் திரு. சுப்ரமணியப்பிள்ளை,  சைவப் பெரியார் திரு.சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் திரு.வெங்கடசாமி நாட்டார், நாவலர் திரு.சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ விசுவநாதம் போன்ற தமிழ்ப்பெரியோர்கள், கி.பி. 1921ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடி, திருவள்ளுவர் காலம் கி.மு.31 என்றும், திருவள்ளுவர் பெயரால் தொடர்ச்சியாக ஆண்டுகளைக் குறிப்பிடலாம் என்ற முடிவையும் கூட்டாக எடுத்தனர்.

    மேலும்,
ஆங்கில ஆண்டுடன் 31-ஐக் கூட்டினால் தமிழாண்டு வரும் (எடுத்துக்காட்டு 2013 + 31 = 2044)  என்று அந்நாளில் முடிவு செய்தனர். திருவள்ளுவர் பெயரில் தொடராண்டு பின்பற்றுவது; அதையே தமிழ் ஆண்டு எனக்கொள்வது; திருவள்ளுவர் ஆண்டின் முதல் திங்கள் தை; இறுதித் திங்கள் மார்கழி; புத்தாண்டுத் துவக்கம் தை முதல் நாள் என்றும் முடிவு செய்தார்கள்.

 
    கி.பி.
1969 ம் ஆண்டில் சென்னை மாநிலம் ‘தமிழ் நாடு’  என்று பெயர் மாற்றம் செய்யப்பட்ட பின்னர், தமிழறிஞர்கள் முன்பளித்த ஆய்வை ஏற்று, கி.பி. 1971 ஆம் ஆண்டில் தமிழ் நாடு அரசு, திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்றது. அதனை 1972 ஆண்டு அரசிதழிலும் வெளியிட்டது.

   இன்றளவும்,
தமிழக அரசின் அலுவலகங்களின் அன்றாட அலுவல்களில் திருவள்ளுவர் ஆண்டே பின்பற்றப்படுகின்றது.
   
    ஆயினும், ஆண்டு பிறப்பது தை முதல் நாளில் என்பது கி.பி.
2008 ல் நடைமுறைக்கு கொண்டு வரப்பட்டு, பின்னர் 2011-ல் ஆட்சி மாற்றம் காரணமாய் கைவிடப்பட்டது. இதனால், 60 ஆண்டு முறை மீண்டும் வழக்கத்திற்கு வர வழியாயிற்று.

   
எனினும், அரசு தனது அலுவலுக்குறிய நாட்காட்டியை ஒன்றாகவும் மக்களின் அலுவலுக்குறிய நாட்காட்டியை வேரொன்றாகவும் இருக்க வகைசெய்திருப்பது கேள்விக்குறியதாக்கியுள்ளது. நடுவுநிலைக் கைவிடப்பட்டதாகவே தோற்றமளிக்கின்றது

  
  பங்காளிகளுக்குள் சண்டை இயல்பாயிருந்தாலும் அதில் பாட்டனை பலிகொடுப்பது ஏற்புடையதல்ல.

 
தமிழைப்
போற்றும் அனைத்து தரப்பினருக்கும் வடமொழி ஆதிக்கத்திலிருந்து விடுபட மாற்றுக்கருத்து இருக்க வாய்ப்பில்லை.

   தமிழர் மாண்படைய வேண்டும் என்ற கருத்தை முதலில், பாகுபாடின்றி ஒட்டுமொத்த தமிழ் மக்கள் தங்கள் மனதில் கொள்ளவேண்டும் அ
துவே நலம் பயக்கும்!